தமிழ்நாடு

விசாரணை கைதி அஜித் உயிரிழப்பு - அரசுக்கு வலுக்கும் கண்டனம்

காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

S Kavitha

29 வயதான அஜித் என்ற இளைஞர் மடப்புரம் காளி கோவிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் மதுரை திருமங்கலத்திலிருந்து நிக்தா,சிவகாமி ஆகிய இருவரும் மடப்புரம் கோவிலுக்கு வந்துள்ளனர்.

அப்போது, பணியிலிருந்த அஜித்திடம் தங்களது கார் சாவியைக் கொடுத்து காரை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தும்படி கூறிவிட்டு, கோவிலுக்கு உள்ளே சென்றுள்ளனர். அஜித்திற்கு கார் ஓட்டத் தெரியாது என்பதால் அருகில் இருந்த இன்னொருவரிடம் கார் சாவியைக் கொடுத்து வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறு கூறியுள்ளார்.

சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த நிக்தா மற்றும் சிவகாமி ஆகியோர் தாங்கள் காரில் வைத்திருந்த 10 சவரன் நகையை காணவில்லை என்று திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பான புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர் நிக்தா, சிவகாமியின் காரை, வாகன நிறுத்துமிடத்தில் விட்ட அஜித்தை விசாரணைக்காக அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையின் போது அஜித்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும்,பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், மருத்துவப் பரிசோதனையின் போது அஜித் மரணம் அடைந்த தாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

அஜித் உயிரிழந்ததையடுத்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுரை மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உறவினர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து,விசாரணையின் போது காவல் நிலையத்திலிருந்த 6 காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

உயிரிழந்த அஜித்தின் தம்பி, என் அண்ணனை விசாரணைக்காக என்று அழைத்து சென்றுவிட்டு இப்போது பிணமாகக் கொடுக்கிறார்கள் என்றும் காவலர்கள் அஜித்தை, ஒருநாள் முழுக்க முட்டிக்கால் போட வைத்து அடித்ததாகவும், ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் அண்ணன் அஜித் மயக்கமடைந்ததாகவும் கூறியுள்ளார்.

விசாரணையின் போது அஜித்தின் வீட்டிலும் சோதனை மேற்கொண்ட காவல் துறையினர் அஜித்தின் தம்பியையும் அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் , காவல் துறை விசாரணையின் போது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு கேள்விகளையும், கண்டனங்களையும் எழுப்பி வருகின்றனர்.

===