Despite balance of Rs. 1,300 crore, the corporation has invited tenders for 600 works Mayor Priya. google
தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி : ஒப்பந்ததாரர்களுக்கு 1,300 கோடி பாக்கி : 600 பணிகளுக்கு "அதி வேகத்தில் டெண்டர்"

சென்னை மாநகராட்சியில், பல்வேறு பணிகளை செய்த ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்கனவே 1,300 கோடி ரூபாய் வரை மாநகராட்சி பாக்கி வைத்துள்ள நிலையில் புதிதாக, 600க்கும் மேற்பட்ட பணிகளுக்கு டெண்டர் கோரியுள்ளது .

Rohini

பல்வேறு பணிகளுக்கான டெண்டர்

Chennai Corporation Tender : சென்னையில் அடிப்படை கட்டமைப்புகளுக்காக மாநகராட்சி பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மழைக் காலங்களில், வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, மழைநீர் வடிகால்வாய் கட்டமைப்பு, சாலை, கல்வி, மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை, மாநகராட்சி செயல்படுத்தி வரும் நிலையில் . இந்த பணிகள் அனைத்தும் டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் வாயிலாகவே செய்யப்பட்டு வருகிறது.

நிலுவையில் இருக்கும் தொகை

ஓராண்டாக, மாநகராட்சியில் பல்வேறு பணிகளை செய்த, 100க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு, 1,300 கோடி ரூபாய் வரை மாநகராட்சி நிதி விடுவிக்காமல் பாக்கி வைத்திருக்கிறது.

இது எப்போது கிடைக்கும் என ஒப்பந்ததாரர்கள் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர்.

அச்சத்தில் ஒப்பந்ததாரர்கள்

ஏற்கனவே செயல்படுத்திய பணிகளுக்கான நிதியயை இன்னும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்காத மாநகராட்சி தற்போது தேர்தல் நெருங்கும் சூழலால் புதிய மாநகராட்சி பணிகளுக்கான புதிய டெண்டர்களை அறிவித்துள்ளது .

அதன்படி தினசரி, 40க்கும் மேற்பட்ட டெண்டர் கோரப்பட்டு , 19 நாட்களில், 600க்கும் மேற்பட்ட டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.

இது ஒப்பந்ததாரர்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திருக்கிறது ,காரணம் இதுவரை விடுவிக்காத முந்தைய பணிகளுக்கான நிதியை வழங்காததே.

மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் வேதனை

சென்னையில், அவசரகால பணிகள் என்ற பெயரில், டெண்டர் பணிகளை எடுத்து செய்கிறோம். வெளியே, வட்டிக்கு கடன் வாங்கிதான், அப்பணியை செய்ய முடிகிறது.

ஆனால், பணி முடிந்து ஐந்து மாதங்களுக்கு மேலான திட்டத்திற்கும் நிதி விடுவிக்காமல், மாநகராட்சி காலம் தாழ்த்தி வருகிறது.

பணம் கொடுப்பதில் காலதாமதம்

சில பணிகளுக்கு ஓராண்டாகியும் பணம் வரவில்லை. தற்போது தேர்தலுக்கு முன், 600க்கும் மேற்பட்ட பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

1,200 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள இப்பணிகளை எடுத்து செய்யும் நிலை ஏற்பட்டாலும் , எப்போது நிதி விடுவிக்கப்படுமோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு டெண்டர் பணிகளுக்கு ஏற்ப, 15 சதவீதம் வரை கமிஷன் வழங்கி வருகிறோம்.

ஆட்சியாளர்களுக்கு கமிஷன்

இந்த ஒப்பந்தத்தை எடுத்து பணி செய்த பின், ஆட்சி மாறினால், அந்த ஆட்சியாளர்களுக்கும் கமிஷன் கொடுத்தால் தான், நாங்கள் பணியாற்றியதற்கான நிதியை பெற முடியும்.

ஆட்சி மாறினால் அவஸ்தை தான்

இல்லையென்றால், நிதி விடுவிக்க கால தாமதத்தை ஏற்படுத்துவர். இதுகுறித்து, யாரிடம் முறையிடுவது என தெரியாமல் தவிப்பதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்தாலும், வருவாய் வரவை விட, செலவினம் அதிகமாக இருந்து வரும் நிலையில் , வருகிற நிதியாண்டில், 1,602 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என, கணக்கிடப்பட்டு உள்ளது.

அதேபோல், 2,000 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு கடன் உள்ளது. இதற்காக ஆண்டுக்கு, 95 கோடி ரூபாய் வரை வட்டி செலுத்தப்படுகிறது.

இதற்கிடையே, பல்வேறு பணிகளை செய்து, பல மாதங்களாக நிதி பெறாமல் ஒப்பந்ததாரர்களும் காத்திருக்கின்றனர். மத்திய, மாநில அரசு நிதி மானியத்தை விடுவிக்காமல் உள்ளது.

அதனால், குறைந்த கால அளவிற்குள், அதிகளவிலான டெண்டரை கோர வேண்டாம் என, மாநகராட்சியை எச்சரித்தோம்.

ஆனால், ஆட்சியாளர்களின் அழுத்தம் காரணமாக, உயர் அதிகாரிகளும், நிதி பற்றாக்குறையைப் பற்றி கவலைப்படாமல், அனைத்து பணிகளுக்கும்வேகவேகமாக டெண்டர் கோரி வருவதாக வருத்தம் தெரிவித்தனர்.