ராஜ்யசபா தேர்தல்
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கு வரும் 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. திமுக சார்பில் 4 பேர், அதிமுக சார்பில் 2 பேர் தேர்வு செய்ய முடியும். அதன்படி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டி
திமுகவில் இருந்து திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோரும், கூட்டணியில் இருக்கும் தேமுதிகவில் இருந்து எல்.கே. சுதீஷ் மற்றும் காங்கிரஸில் இருந்து கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதேபோல், அதிமுகவில் இருந்து தம்பிதுரையும், அந்தக் கூட்டணியில் இருக்கும் பாமகவில் இருந்து அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனு பிரமாண பத்திரங்களில், தங்களின் சொத்து விவரம் குறித்து குறிப்பிட்டுள்ளனர்.
திருச்சி சிவா சொத்து மதிப்பு
திருச்சி சிவா: திருச்சி சிவா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தனது கையிருப்பில் ரூ. 6 லட்சம் இருப்பதாகவும், அசையும் சொத்துகளாக தனது பெயரில் 2 கோடியே 18 லட்சத்து 53 ஆயிரத்து 441 ரூபாயும், தனது குடும்பத்தினர் பெயரில் 72 லட்சத்து 75 ஆயிரத்து 663 ரூபாயும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தனது பெயரில் ரூ. 3 கோடியே 86 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலும், தனது மனைவி பெயரில் ரூ. 73 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலும், தனது குடும்பத்தினர் பெயரில் ரூ. 23 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலும் அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் சொத்து மதிப்பு
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தனது கையிருப்பாக ரூ.90 ஆயிரம், மனைவி பெயரில் ரூ.50 ஆயிரம், மகன் பெயரில் ரூ.60 ஆயிரம், மகள் பெயரில் ரூ.65 ஆயிரம் இருப்பதாக கூறி உள்ளார்.
அசையும் சொத்துகளாக தனது பெயரில் ரூ.22 லட்சத்து 75 ஆயிரத்து 796-ம், மனைவி பெயரில் ரூ.1 கோடியே 38 லட்சத்து 35 ஆயிரம், மகன் பெயரில் ரூ.21 லட்சத்து 35 ஆயிரம், மகள் பெயரில் ரூ.1 கோடியே 20 லட்சத்து 75 ஆயிரம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தனது பெயரில் ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும், மனைவி பெயரில் ரூ.1 கோடியே 43 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பதாக கூறி உள்ளார்.
கிறிஸ்டோபர் திலக் சொத்து மதிப்பு
கிறிஸ்டோபர் திலக் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தனது பெயரில், 9.22 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையும் சொத்து, 1.07 கோடி ரூபாய் மதிப்பில் அசையா சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எல்.கே.சுதீஷ் சொத்து மதிப்பு
எல்.கே.சுதீஷ் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தன்னிடம், 1.50 லட்சம் ரூபாய்; தனது மனைவியிடம் 1 லட்சம் ரூபாய்; அவரை சார்ந்து இருப்பவர்களிடம் 35,000 ரூபாய் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நகை, வாகனம், முதலீடுகள் என, தன்னிடம், ரூ. 11.03 கோடி; தன் மனைவியிடம் ரூ. 13.17 கோடி; அவரை சார்ந்திருப்போரிடம், 5.35 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் உள்ளன என தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னிடம், ரூ. 28.16 கோடி; தன் மனைவியிடம் ரூ. 19.69 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தம்பிதுரை சொத்து மதிப்பு
தம்பிதுரை தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், ரூ. 12.47 லட்சம், மனைவி பானுமதிக்கு ரூ. 76.33 லட்சம், குடும்ப உறுப்பினருக்கு 13.89 லட்சம் ரூபாய் என, ஆண்டுக்கு மொத்தம் 1.02 கோடி ரூபாய் வருவாய் வருகிறது. மொத்தமாக, 10.81 கோடி ரூபாய் மதிப்புக்கு அசையும் சொத்து உள்ளது.
அசையா சொத்து மதிப்பு, 59.88 கோடி ரூபாய். மொத்த சொத்துக்களின் மதிப்பு 70.69 கோடி ரூபாய். இவரது மனைவி பெயரில், 15 கோடி ரூபாய் கடன் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புமணி சொத்து மதிப்பு
அன்புமணி தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தனது பெயரில் அசையும் சொத்துகளான வங்கி கணக்கு, முதலீடு, ஆபரணங்கள், வாகனங்கள் என ரூ.1 கோடியே 52 லட்சத்து 60 ஆயிரத்து 860-ம், மனைவி சவுமியா பெயரில் ரூ.16 கோடியே 85 லட்சத்து 28 ஆயிரத்து 417-ம், அவரை சார்ந்தவரின் பெயரில் ரூ.93 லட்சத்து 82 ஆயிரத்து 144-ம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகளாக அன்புமணி பெயரில் ரூ.6 லட்சத்து 85 ஆயிரமும், மனைவி பெயரில் ரூ.48 கோடியே 79 லட்சத்து ஆயிரத்து 486-ம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
=================