Devotees shocked by reports temple administration has decided to hike service charges at Thiruchendur temple AI generated
தமிழ்நாடு

திருச்செந்தூர் ”சேவைக் கட்டணங்கள் உயர்வு?” : கோவில் நிர்வாகம் பரிசீலனை : கருத்துக் கேட்பு, பக்தர்கள் அதிர்ச்சி...!

திருச்செந்தூர் கோவிலில் சேவைக் கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தி இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Kannan

திருச்செந்தூர் முருகன் கோவில்

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில். அறுபடை வீடுகளில் ஒன்றான இந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக் கணக்கான வருகை தந்து முருகப் பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.

சேவைக் கட்டணங்கள் உயர்வா?

இந்தநிலையில், வருவாய் குறைவை காரணம் காட்டி, சேவைக்கட்டணத்தை உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நிர்வாகத்தின் நலன் கருதியும் தக்கார் தீர்மானத்தின் அடிப்படையிலும் தற்போதுள்ள சேவைக் கட்டணங்கள் மற்றும் அபிஷேக, சிறப்புத் தரிசனக் கட்டணங்களை உயர்த்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தங்கரத உலா கட்டணம் ரூ.5,000

அதன்படி, தங்கரத உலா திட்டத்திற்கான ஒருநாள் கட்டணம் 2,500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாகவும், அதன் நிரந்தர வைப்பு நிதி 50,000 ரூபாயில் இருந்து 1 லட்ச ரூபாயாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சண்முகார்ச்சனை ரூ.30,000

இதேபோல் சண்முகார்ச்சனைக்கான ஒருநாள் கட்டணம் 5,000 ரூபாயில் இருந்து 30,000 ரூபாயாகவும், மூலவர் அபிஷேகத்திற்கான ஒருநாள் கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

ஒன்பது கால பூஜை ரூ.6,500

ஒன்பது கால பூஜைக்கான ஒருநாள் கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 6,500 ரூபாயாகவும், அதன் நிரந்தர வைப்பு நிதி 20,000 ரூபாயில் இருந்து 90,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்படுகிறது.

சந்தனக்காப்பு ரூ.1,000

சந்தனக்காப்பு செய்வதற்கான ஒருநாள் அனுமதி கட்டணம் தற்போதுள்ள 100 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான 1.5 கிலோ சந்தனக் கட்டை வழங்கும் நடைமுறையில் மாற்றமில்லை.

அபிஷேக தரிசன கட்டணம் ரூ.2,500

அபிஷேக தரிசனக் கட்டணம் தற்போது சாதாரண நாட்களில் 500 ரூபாயாகவும், திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் 2,000 ரூபாயாகவும், இனி அனைத்து நாட்களுக்கும் பொதுவான முறையில் 2,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட உள்ளது.

பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு

கட்டண உயர்வுகள் குறித்து பக்தர்கள் அல்லது பொதுமக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை எழுத்துப்பூர்வமாக வரும் 07.07.2026 மாலை 05.45 மணிக்குள் திருச்செந்தூர் கோயில் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பக்தர்கள் அதிர்ச்சி

திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், வருவாய் குறைவைக் காரணம் காட்டி சேவைக்கட்டணங்கள் மற்றும் அபிஷேகக் கட்டணங்களைப் பல மடங்கு உயர்த்துவது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

================