திருப்புவனத்தில், நகைகள் திருடுபோன புகாரின் பேரில் அஜித்குமார் என்ற வாலிபர் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்த விவகாரம், தமிழக அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது.
வழக்கு சிபிஐக்கு மாற்றம் :
எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம், பொதுமக்களின் கொந்தளிப்பை அடுத்து, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை போலீஸ் எஸ்பி.யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும், மானாமதுரை டிஎஸ்பி.யை சஸ்பெண்ட் செய்தும், குற்றம் சாட்டப்பட்ட போலீசாரை கைது செய்தும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
போலீஸ் தனிப்படை காரணமா? :
இந்த சம்பவத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது, போலீஸ் தனிப்படை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநகரிலும், தனிப்படை என்ற பெயரில் போலீசார், அந்தந்த உயர் அதிகாரிகளின் தலைமையில் செயல்படுவது வழக்கம்.
இந்த போலீசார் வெவ்வேறு காவல் நிலையங்களில் பணிப் பட்டியலில் இருந்தாலும், உயர் அதிகாரிகளின் கூடவே இருந்து, அவர்கள் கூறும் செயல்களை மட்டுமே செய்வது வழக்கமாக உள்ளது. பொதுவாக தங்களுக்கு நெருக்கமான போலீசாரை, இந்த தனிப்படைகளில் உயர் அதிகாரிகள் வைத்துக் கொள்கின்றனர். இவர்கள் சட்டத்தை மீறி செயல்பட்டாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது கிடையாது.
தனிப்படைகளை கலைக்க டிஜிபி உத்தரவு :
இலை மறைவு காய் மறைவாக இருந்த தனிப்படையினர் அத்துமீறல், சிவகங்கை அஜித் குமார் மரணத்துக்கு பிறகு, வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதை உணர்ந்த தமிழக டிஜிபி உடனடியாக தனிப்படைகளை கலைக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குற்றச் செயல்கள் நடக்கும்போது, அதன் தன்மைக்கு ஏற்ப உரிய நோட்டீஸ் கொடுத்து தனிப்படைகள் அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து, மாவட்டம், மாநகரங்களில் செயல்பட்டு வந்த போலீஸ் தனிப்படைகள் கலைக்கப்படுகின்றன.
===