Dharapuram and Maduranthakam DMK, AIADMK focusing one each, to securing victory  source:thamizhalai,ai generated
தமிழ்நாடு

மதுராந்தகத்தில் DMK, தாராபுரத்தில் ADMK : ”தலா ஒரு தொகுதிக்கு குறி” : தவெக வியூகம் என்ன? எகிறும் எதிர்பார்ப்பு.!

தாராபுரம், மதுராந்தகம் இரண்டு தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தாலும், தலா ஒரு தொகுதியை திமுக, அதிமுக வெற்றி இலக்காக நிர்ணயித்து களப்பணி ஆற்றி வருவதாக தெரிகிறது.

Kannan

இரண்டு தொகுதி இடைத்தேர்தல்

TN By Election Maduranthakam Dharapuram : தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுதாக்கல் நடைமுறை அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் அக்டோபர் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 9ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

5 முனைப்போட்டி

இதில் ஆளுங்கட்சியான தவெக மட்டுமின்றி திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் மற்றும் நாதக என ஐந்து கட்சிகள் வேட்பாளர்களை இறக்கியுள்ளன. வாக்குப்பதிவு நெருங்க நெருங்க தேர்தல் பரப்புரை சூடுபிடித்து வருகிறது.

தலா ஒரு தொகுதி - அதிமுக, திமுக இலக்கு

இந்த தொகுதிகளில் ஐந்து முனை போட்டி நிலவுவதை போன்று காட்சியளித்தாலும், கள நிலவரம் வேறாக இருப்பதாக கூறப்படுகிறது. தவெக இரண்டு தொகுதிகளிலும் வெல்ல முனைப்பு காட்டி வரும் சூழலில், திமுக மற்றும் அதிமுக தலா ஒரு தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது.

திமுக - அதிமுக மறைமுக கூட்டணியா?

சட்டமன்ற பொதுத்தேர்தலில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலுமே அதிமுக தான் வென்று இருந்தது. ஆனால், அதிமுக எம்எல்ஏக்கள் சத்யபாமா, மரகதம் குமரவேல் இருவருமே தங்களது பதவியை ராஜினாமா செய்து, ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்து தற்போது மீண்டும் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

வேட்பாளர்களுக்கு பாடம் புகட்ட கங்கணம்

எனவே, அவர்களை வீழ்த்தி தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என அதிமுக விரும்புகிறது. அதேநேரம், இரண்டு தொகுதிகளிலும் வென்று சட்டமன்றத்தில் தவெக மேலும் வலுவடையக் கூடாது என திமுக விரும்புகிறது.

எதிர்க்கட்சிகளான அதிமுக மற்றும் திமுக எதிரெதிர் துருவங்களாக நின்று வாக்குகளை பிரித்து, தவெகவின் வெற்றிக்கு வழிவகுப்பதை காட்டிலும், தங்களுக்கு சில சமரசங்களை செய்துகொண்டு விட்டுக்கொடுத்து, பொது எதிரியை வீழ்த்தலாம் என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அதன்படி, தாராபுரத்தை அதிமுகவும், மதுராந்தகத்தை திமுகவும் குறிவைத்து பரப்புரையை முடுக்கிவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமூக வாக்குகளை நகர்த்தும் அதிமுக

தாராபுரம் தொகுதியில் வென்றாக வேண்டும் என முனைப்பு காட்டும் அதிமுக, மதுராந்தகத்தில் இன்னும் பரப்புரையை கூட முழு வீச்சில் முன்னெடுக்கவில்லை.

தாராபுரத்தில் கொங்கு வேளாளர் கவுண்டர்களின் வாக்குகளை முழுமையாக தங்க வசம் இழுப்பதை குறி வைத்து மட்டுமே அதிமுக தீவிரமாக வேலை பார்த்து வருகிறது.

கூடுதலாக அருந்ததியர் மற்றும் முதலியார் போன்ற பிற சமூக வாக்குகளை வசப்படுத்தினால் வெற்றி நிசய்யம் என கணக்கு போடுகிறார் எடப்பாடி பழனிசாமி.

மதுராந்தகம் - திமுக தீவிரம்

மறுமுனையில் சென்னைக்கு அடுத்து உள்ள மதுராந்தகம் தொகுதியில் வென்று தவெகவிற்கு பின்னடைவை ஏற்படுத்த திமுக முனைப்பு காட்டி வருகிறது. கட்சியின் ஒட்டுமொத்த முக்கிய நிர்வாகிகளும் அங்கு களமிறக்கப்பட்டுள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

அதிமுகவின் திரைமறைவு ஆதரவும் இருப்பதாக கூறப்படுவதால், உடன்பிறப்புகள் உற்சாகமாக இருக்கிறார்கள்.

நிர்பந்தத்தில் தவெக

திமுக, அதிமுகவை போன்று இல்லாமல் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருப்பதால், தவெகவினர் தான் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் நாலாபுறமும் வாக்கு சேகரிப்பில் மும்முரமாக உள்ளனர்.

போட்டி கடுமையாக உள்ளதால் முதலமைச்சர் விஜய் இங்கு பரப்புரை மேற்கொண்டால் மட்டுமே, தவெகவிற்கு ஆதரவு என்பது வலுப்பெறக்கூடும் என நிர்வாகிகள் நம்புகின்றனர்.

பிரசாரத்தில் ஈடுபட இருக்கும் முதல்வர் விஜய்

எனவே, இரண்டு தொகுதிகளிலு தலா இரண்டு நாட்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். எனவே, இடைத்தேர்தலில் திமுக, அதிமுக அனுபவ கணக்கு பலிக்குமா? தவெக வெற்றியை அறுவடை செய்யுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.

====================