தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதிமுக கூட்டணி
இதில் முதல் ஆளாக அதிமுக, கூட்டணியை உறுதிசெய்துள்ளது. கடந்த ஆண்டே பாஜகவை தங்கள் அணியில் இணைத்த அதிமுக, அடுத்ததாக அன்புமணி பாமக, அமமுக, ஐஜேகே, தமாகா உள்ளிட்ட கட்சிகளை சேர்த்துள்ளது.
குழப்பும் தேமுதிக
இந்தநிலையில், தேமுதிக எந்த கூட்டணிக்கு செல்ல போகிறது என்பது மட்டும் இன்று வரை மர்மமாகவே உள்ளது. 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அதிக தொகுதிகளை கேட்டதால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக கழட்டி விடப்பட்டது.
அதிமுக மீது தேமுதிக அதிருப்தி
2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக கை கொடுத்தது தேமுதிக மட்டுமே, எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜ்யசபா சீட் கொடுக்காத அதிருப்தி காரணமாக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது.
தேமுதிகவுக்கு அதிமுக ஆஃபர்
தேமுதிகவை சமாதானம் செய்யும் வகையில் மார்ச் மாதம் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலின் போது சீட் ஒதுக்கப்படும் என அதிமுக அறிவித்தது.
ஆனால் இதனை தேமுதிக தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் தேமுதிக அதிமுக, திமுக தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதிமுக, திமுக செக்
தேமுதிகவிற்கு 1% குறைவான ஆதரவே இருப்பதால், அதிமுக தரப்பு அதிகபட்சமாக 7 தொகுதி, மாநிலங்களவை பதவி மட்டும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதேபோல திமுக தரப்பில் அதிகபட்சம் 6 தொகுதி மட்டுமே என உறுதியாக தெரிவித்து விட்டது.
எதிர்பார்ப்பில் பிரேமலதா
ஆட்சி அமைக்கவும், முதலமைச்சராக ஆகவும் நாங்கள் உதவி செய்கிறோம். எனவே எங்களை மதித்து, மரியாதையாக நடத்த வேண்டும் வெளிப்படையாகவே பிரேமலதா பேசி வருவது அதிமுக, திமுகவை எரிச்சலடைய வைத்து இருக்கிறது.
தேமுதிக கூட்டம்
இந்தநிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்ந கூட்டத்தில் யாருடன் கூட்டணி என்பதை பிரேமலதா முடிவெடுத்து அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது. திமுக, அதிமுக தரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.
===================