DMK has announced that it will conduct election campaign in 234 assembly constituencies from February 1 under the theme 'Tamil Nadu will not bow down'. 
தமிழ்நாடு

‘தமிழ்நாடு தலைகுனியாது’ : பிப்ரவரி 1 முதல் திமுக தேர்தல் பரப்புரை

DMK Election Campaign 2026 : ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளில் பிப்ரவரி 1 முதல் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருப்பதாக திமுக அறிவித்துள்ளது.

Kannan

தமிழக சட்டசபை தேர்தல்

DMK Election Campaign 2026 : தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான அறிவிப்பு பிப்ரவரி இறுதியில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றன.

திமுக தேர்தல் பிரசாரம்

அந்த வகையில், மண்டல மாநாடுகளை தொடர்ச்சியாக நடத்தி வரும் திமுக, பிப்ரவரி முதல் தேதியில் இருந்து முறைப்படி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறது.

‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை

இது குறித்து அக்கட்சி பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 20-ம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.

நட்சத்திர பேச்சாளர்கள்

இந்த பரப்புரையின் கீழ், கட்சித் தலைவர் ஸ்டாலினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள், தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிரமான பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

தொகுதிக்கு ஒரு பொதுக்கூட்டம்

இந்த பரப்புரையின் போது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், ஒரு பொதுக்கூட்டம் நடத்திட வேண்டும். மேலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஒரே இடத்தில் அழைத்து, மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறியும், கலந்துகொள்வோரின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்

‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரையை வெற்றியடையச் செய்திடும் வகையில் பரப்புரை குறித்து தக்க விளம்பரங்களைச் செய்திடவும், தொகுதிகளில் தேவையான ஏற்பாடுகளைச் செய்திடவும் மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நட்சத்திர பேச்சாளர்கள்

சபாபதி மோகன், திண்டுக்கல் ஐ. லியோனி, ராஜகண்ணப்பன், பொன்.முத்துராமலிங்கம், ஏ.கே.எஸ்.விஜயன், இனிகோ இருதயராஜ் மனோஜ் பாண்டியன், அந்தியூர் ப.செல்வராஜ், கோவி.செழியன், எம்.எம்.அப்துல்லா, எழிலன், நாகநாதன், தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், பழனிவேல் தியாகராஜன்...

ஜெகத்ரட்சகன், கனிமொழி என்.வி.என்.சோமு, கலாநிதி வீராசாமி, திருச்சி சிவா, கார்த்திகேய சிவசேனாபதி, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் பிரசாரம் செய்வார்கள்” என்று துரைமுருகன் தெரிவித்து இருக்கிறார்.

=================