சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக- காங்கிரஸ் கருத்து வேறுபாடுகள் உச்சத்தை தொட்டு வருகின்றன. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. .
திமுக vs காங்கிரஸ்
கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக காங்கிரஸ் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் கூடுதல் தொகுதிகளில், ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை காங்கிரஸ் கையில் எடுத்து இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது தான்.
காங்கிரசுக்கு விஜய் கிரீன் சிக்னல்
விஜய் தரப்பில் இருந்து கிடைத்து இருக்கும் கிரீன் சிக்னல், தமிழக காங்கிரஸ் தலைவர்களை பகிரங்கமாக பேச வைக்கிறது. ராகுல் காந்தியின் வலது கரம் என்று கூறப்படும் பிரவீன் சக்ரவர்த்தி, நடிகர் விஜயை சந்தித்து பேசி, பிள்ளையார் சுழி போட, எம்பிக்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி பொன்றோர் தங்கள் கருத்துகளை பகிரங்கமாக வெட்ட வெளியில் தெரிவித்து வருகின்றனர்.
30 தொகுதிகள் - திமுக ஆஃபர்
தமிழக காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதி என்ற வகையில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. அதிகபட்சமாக முப்பது தொகுதிகள் வரை ஒதுக்கி தரலாமென திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறைந்தபட்சம் 35 தொகுதிகளை ஒதுக்கி தர வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
கூடுதல் தொகுதிகள் - திமுக தயக்கம்
பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் தேவை என்பதால், கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க திமுக யோசிக்கிறது.
காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கினால் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் அதிக இடங்களை தர வேண்டிய சூழல் ஏற்படும்.
காங்கிரசின் வலிமை
காங்கிரசை பொருத்தவரை தவெகவுடன் கூட்டணி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டு, திமுகவை பகைத்து கொண்டால், தனித்து தான் போட்டியிட முடியும். காங்கிரசுக்கு தனது வலிமை தெரியும் என்பதால், அப்படிப்பட்ட ரிஸ்க்கை ஒருபோதும் எடுக்காது.
வேட்பாளர்கள், நிதி - தடுமாறும் தவெக
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியை விட்டால் வேறு வழி இல்லை என்று நிலைமைக்கு தவெக தள்ளப்பட்டு இருக்கிறது. தவெக சார்பில் போட்டியிடுவதற்கு சரியான வேட்பாளர்கள், அதாவது வெற்றிக் கனியை பறிக்கும் நபர்கள் இல்லை.
மக்கள் செல்வாக்கு இல்லாத வேட்பாளர்கள், தேர்தல் செலவுக்கு போதிய நிதி ஆதாரங்கள் இல்லாமையில் தவெக தள்ளாடுகிறது.
தவெகவின் கணக்கு
காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால், ஓரளவு செல்வாக்கான வேட்பாளர்கள் கிடைப்பார்கள். மேலும் போட்டியிடும் தொகுதிகளுக்கான செலவை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும்.
எனவே, தான் காங்கிரசுக்கு 60 தொகுதிகள், நுணை முதல்வர், ஆட்சியில் பங்கு என்ற சலுகைகளை வாரி வழங்க தயாரக இருக்கிறது தவெக.
ராகுல் காந்தி பரிசீலனை
இந்தத் தகவல்கள் சில முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் மூலம் டெல்லிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே தான் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதை விட, புதிய முயற்சி எடுத்து தவெகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள கூடாது என ராகுல் காந்தி ஆலோசிப்பதாக தெரிகிறது.
விஜய் இமேஜ் - காங்கிரஸ் எதிர்பார்ப்பு
தவெகவுடன் கூட்டணி அமைத்தால் தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரி, கேரள சட்டமன்ற தேர்தல்களில் விஜயின் பிரசாரம் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கும்.
வரும் காலங்களில் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவிலும் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு காங்கிரசுக்கு கை கொடுக்கும். எதிர்பார்க்கும் வகையில் இதில் வெற்றி கிடைத்தால், தென்னிந்திய மாநிலங்கள் காங்கிரஸ் வசமாகும்.
2029 மத்திய ஆட்சி - காங்கிரஸ் ஆசை
இது 2029 மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு சுமார் 100 தொகுதிகள் வரை கூட வெற்றியை ஈட்டித் தரலாம்.
தென்னிந்தியாவில் 100 தொகுதிகளில், வட இந்திய மாநிலங்களில் கூட்டணி அமைத்து 140 தொகுதிகளில் வெற்றி பெற்றால் காங்கிரசால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும்.
பாஜகவை எதிர்க்கும் மாநில கட்சிகள் கூட்டணி அரசில் அங்கம் வகித்து, காங்கிரசை ஆதரிக்க தயக்கம் காட்ட வாய்ப்பும் இல்லை.
கூட்டணி - போராடும் திமுக
இவற்றை எல்லாம் யோசித்து பார்த்துதான், திமுக கூட்டணியை விட்டு விலக தவெகவுடன் கூட்டணி அமைக்கலாமா என ராகுல் காந்தி ஆலோசித்து வருகிறார்.
காங்கிரசின் இந்த யோசனை திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருப்பதாக தெரிகிறது. காங்கிரசுக்கு தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் வலிமை இல்லா விட்டாலும், சிறுபான்மை வாக்குகள் அக்கட்சி வசம் உள்ளன.
அது தவெக பக்கம் நகர்ந்தால் திமுகவின் வெற்றி வாய்ப்புகள் அடிபட்டு போகும்.
தவெகவை வைத்து மிரட்டும் காங்கிரஸ்
காங்கிரசை தொடர்ந்து கம்யூனிஸ்ட்கள், விசிக வெளியேறினால், திமுகவின் நிலைமை மேலும் சிக்கலாகி விடும்.
இதை எல்லாம் பரிசீலித்து பார்க்கும் திமுக தலைமை, எப்படியாவது பழைய கூட்டணியை தக்கவைக்க திமுக போராடுகிறது.
வைக்கப்படும் கோரிக்கைகளை திமுக நிறைவேற்ற முன்வரா விட்டால், தவெக பக்கம் காங்கிரஸ் திசை திரும்புவது உறுதி என்கிறார்கள் கதர் சட்டையினர்.
==================