DMK once again offered to offer only one seat to Velmurugan, it has been revealed that the AIADMK has offered 3 seats google
தமிழ்நாடு

வேல்முருகனை ”கைவிடுகிறதா திமுக?” : ”3 தொகுதிகள் அதிமுக ஆஃபர்!”, 24 மணி நேரம் கெடு : நாளை அறிவிக்கிறார் வேல்முருகன்

DMK TVK Alliance 2026 : வேல்முருகனுக்கு திமுக மீண்டும் ஒரு தொகுதியை மட்டுமே வழங்க முன்வந்துள்ள நிலையில், அதிமுக சார்பில் 3 தொகுதிகள் ஆஃபர் தரப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

Kannan

வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி

DMK TVK Alliance 2026 : பாமகவில் இருந்து விலகிய வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற பெயரில் தனியாக கட்சி நடத்தி வருகிறார். வன்னிய சமுதாய மக்கள் இடையே இவருக்கும் செல்வாக்கு உள்ளது.

காங்கிரசால் திமுகவுக்கு சிக்கல்

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதில் வேகம் காட்டிய திமுக, தவெக பக்கம் காங்கிரஸ் செல்லாமல் தடுக்க 28 தொகுதிகளோடு உடன்பாடு செய்தது.

கூடுதலாக 3 தொகுதிகளை காங்கிரசுக்கு கொடுத்த காரணத்தால், மற்ற கட்சிகள் அதிக இடங்களை கேட்கும் போது கொடுக்க இயலாமல் கைவிரிக்க வேண்டிய நிலைக்கு திமுக தள்ளப்பட்டு இருக்கிறது.

வேல்முருகன் - கூடுதல் தொகுதிகள்?

2021 சட்டமன்ற தேர்தல் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் வேல்முருகன்.

இந்தமுறை அவர் கூடுதல் தொகுதிகள் கேட்ட நிலையில், மீண்டும் ஒரு தொகுதிதான், உதயசூரியனில் தான் போட்டியிட வேண்டும் என்று திமுக திட்டவட்டமாக கூறி விட்டதாக தெரிகிறது.

மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள்

பாஜகவை எதிர்ப்பதில் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் திமுகவிற்கு பெரிய பலம் சேர்த்தன. அவற்றில், இந்திய கம்யூனிஸ்ட் 5 தொகுதிகளை வாங்கிக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஆனால், மார்க்சிஸ்ட்டும், விடுதலை சிறுத்தைகளும் கூடுதல் தொகுதிகள் கேட்கின்றன. தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வந்த திமுக, அந்தக் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை கொடுத்து விட்டு குறைந்தது 8 சட்டமன்ற தொகுதிகளை தர வேண்டிய நிர்பந்தத்தில் சிக்கியிருக்கிறது.

வேல்முருகனை இழக்கும் திமுக

இந்த சூழலில் வேல்முருகனும் கூட்டணியில் இருந்து விலகினால், வன்னியர்கள் வாக்குகள் திமுகவிற்கு கணிசமாக குறையும்.

மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகளை சமாதானம் செய்து, குறைந்த தொகுதிகள் கொடுத்து களத்திற்கு சென்றாலும், 100 சதவீதம் ஒத்துழைப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

3 தொகுதிகள் - அதிமுக ஆஃபர்

இந்தச்சூழலில் வேல்முருகனும் 3 தொகுதிகளை கொடுக்க அதிமுக ஆஃபர் கொடுத்து இருக்கிறது. மேலும் அவர் வைக்கும் 10 கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என்றும் அதிமுக வாக்கு கொடுத்து இருக்கிறதாம்.

பாஜக, பாமக உடனான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டதும், வேல்முருகன் தரப்புடன் எடப்பாடி பேச்சு நடத்துவார் என்று கூறப்படுகிறது.

வேல்முருகன் - 24 மணி நேரம் கெடு

எனவே, தொகுதி பங்கீடு குறித்து திமுகவிற்கு 24 மணி நேர கெடு விதித்து இருக்கும் வேல்முருகன் நாளை தனது இறுதி முடிவை அறிவிக்கிறார்.

அதிமுக கூட்டணிக்கு அவர் செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிகிறது.

==============