தமிழக தேர்தல் களம் :
சட்டசபை தேர்தலுக்கு 8 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. திமுக கூட்டணி அப்படியே தொடருமா? அதிமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருமா? தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் தனித்துதான் போட்டியா? என்ற கேள்விகள் அணிவகுத்து நிற்கின்றன. இந்தக் கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தெரிய வந்து விடும்.
திமுகவை நெருக்கும் கூட்டணி கட்சிகள் :
கூட்டணி வலுவாக இருப்பது போன்ற தோற்றத்தை திமுக ஏற்படுத்த முயன்றாலும், அதிலிருக்கும் கட்சிகள், கூடுதல் தொகுதிகளுக்காக, தேர்தல் நெருக்கத்தில் அணி தாவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. காரணம் யார் வந்தாலும் வரவேற்க அதிமுக தயாராக இருக்கிறது. அதேபோன்று, தனித்து போட்டி, விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக வெற்றிக் கழகமும் திமுக, பாஜக, அதிமுகவை தவிர்த்து யார் வந்தாலும் கூட்டணியில் சேர்க்கும் என்றே தெரிகிறது. இரண்டு வாய்ப்புகள் இருப்பதால், திமுக கூட்டணி கட்சிகள் கூடுதல் இடங்கள் பற்றி பேசத் தொடங்கி விட்டன.
வலுவான நிலையில் திமுக கூட்டணி :
முக்கிய கட்சியான காங்கிரசிலும், தேர்தல் கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு என்ற கோஷங்கள் கேட்கத் தொடங்கி விட்டன. 2019 மக்களவை தேர்தலில் இருந்து, திமுக கூட்டணியில் காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக மற்றும் முஸ்லிம் இயக்கங்கள் அங்கம் வகித்து வருகின்றன.
அடுத்தடுத்த தேர்தல்களிலும், இதே கூட்டணிக்கு வெற்றி கிடைத்து வருவதால், வரும் சட்ட சபை தேர்தலுக்கும் இதே அணியை கொண்டு செல்ல திமுக தலைமை விரும்புகிறது.
திமுக மீது கூட்டணி கட்சிகள் அதிருப்தி
திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மீது அதிருப்தியில் இருக்கும் கூட்டணி கட்சிகள், அரசியல் ரீதியாக சில நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. இதை கண்கூடாக பார்க்க முடிகிறது. ஆளும் தரப்பிலும், அதிகார மட்டத்திலும் முக்கியத்துவம் இல்லாததோடு, தேர்தலுக்கு தேர்தல் தொகுதிக்காக போராட வேண்டிய நிலையும், குறைந்த தொகுதிகளையே கொடுப்பதால், கூட்டணி கட்சியினரை விரக்தியில் ஆழ்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.
கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் விரக்தி :
ஆட்சி, அதிகாரத்தை திமுகவினர் மட்டுமே முழுமையாக அனுபவித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக ஒரே கூட்டணியில் நீடிப்பது, ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டாமல் மவுனம் காப்பது, கூட்டணி கட்சி தொண்டர்களை சோர்வடைய வைத்து இருக்கிறது. தேர்தல் நேரத்தில் மட்டுமே தங்களை திமுக பயன்படுத்திக் கொள்வதாகவும், மற்ற நேரங்களில் கண்டு கொள்வதில்லை என்றும் குமுறுகின்றனர் கூட்டணி கட்சிகள் தொண்டர்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிருப்தி :
குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, திமுக மீதும், ஆட்சி மீதும் ஆழமான அதிருப்தி இருக்கிறது. மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்துவதையே முழு நேர பணியாக கொண்டிருக்கும் அக்கட்சியால், நினைத்த நேரத்தில் குரல் கூட கொடுக்க முடியவில்லை. சாம்சங் தொழிலாளர் பிரச்னை ஆகட்டும், அரசு திட்டங்களுக்காக விளை நிலங்கள் எடுக்கும் பிரச்னை ஆகட்டும், எதற்குமே போராட முடியாதபடி, ஆளும் தலைமை தடை போட்டு விடுகிறது.
கடும் அதிருப்தியில் விடுதலை சிறுத்தைகள் :
மற்றொரு கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகளுக்கும், இதே அதிருப்தி இருக்கிறது.தங்கள் கட்சிக்குள் புகுந்து அரசியல் செய்யும் அளவுக்கு திமுக போய் விட்டதாகவும், சுதந்திரமாக எந்த முடிவையும் எடுக்க விடாமல் வைத்திருப்பதாகவும், திருமாவளவன் நினைப்பதாக கூறப்படுகிறது
கூடுதல் இடங்கள் கேட்கும் மதிமுக :
,மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், திமுக தலைமை மீது புழுக்கத்தில் இருக்கிறார். மதிமுக கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க கூடுதல் இடங்களில் போட்டியிட்டால் மட்டுமே முடியும். மதிமுக பலவீனப்பட்டு நிற்பதை காரணமாக காட்டி, தனக்கு ராஜ்யசபா 'சீட்' மறுக்கப்பட்டதை அவர் அவமானமாக கருதுகிறார். நல்ல வாய்ப்பு ஏதும் இல்லாததால், வேறு வழியின்றி திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது.
ஆட்சியில் பங்கு - ஆசைப்படும் காங்கிரஸ் :
திமுக, அனுதாபியாக தமிழக காகிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இருந்தாலும், அவரது டில்லி தலைவர்கள் அப்படி இல்லை. அதிக சீட்
கொடுத்தால் மட்டுமே, திமுக கூட்டணியில் தொடர வேண்டும். இல்லையென்றால், விஜய் அமைக்கும் புதிய கூட்டணிக்கு செல்ல வேண்டும் என, வெளிப்படையாகவே பேச்சு வருகிறது. மெல்ல மெல்ல திமுக ஆட்சியையும் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விமர்சிக்க தொடங்கி விட்டார்கள்.
இப்படி கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றும் அதிருப்தியில் இருப்பதும், அலப்பரை செய்வதுமாக, ஆளுங்கட்சிக்கு நெருக்கடிகளை கொடுத்து வருகின்றன. அதையெல்லாம் சமாளித்து, வேறு வழிகளில் சரிக்கட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் திமுக இருக்கிறது.
உளவுத்துறை ரிப்போர்ட்டால் திமுக ஷாக் :
இதனிடையே, உளவுத்துறை தந்த ரிப்போர்ட், அந்த நம்பிக்கையை தகர்த்து விட்டதாக தெரிகிறது. அதிக தொகுதிகள், ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு, நடிகர் விஜய் பக்கம் சாய, கூட்டணி கட்சிகள் சில, நாள் பார்த்து வரும் தகவல், ஆளும் தலைமையை அதிர வைத்துள்ளது.
இதை சரிக்கட்டும் வகையில் உருவானவதே, 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசாரம். கூட்டணி பேரத்தையும், அணி மாறும் வாய்ப்பையும் முறியடிக்க, தனித்து களம் காணும் நோக்கில் தயாரானது தான் இந்த பிரசார இயக்கம் என்கிறது அறிவாலய தரப்பு.
முதல்வர் முதல் தொண்டர்கள் வரை :
முதல்வர், அமைச்சர்கள், நிர்வாகிகள் என, திமுகவைச் சேர்ந்த அனைவரும் ஒட்டு மொத்தமாக களமிறக்கப்பட்டு, வீடு வீடாக சென்று, மக்களை சந்தித்து வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் தகவல்கள், கோரிக்கைகள் அடிப்படையில் இலவச திட்டங்கள் அறிவிக்கப்படும்.
தனித்து போட்டி? பரிசீலிக்கும் திமுக :
அதன்பிறகு பாருங்கள், தனித்து போட்டி என்ற அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்கிறது ஆளும் தரப்பு. மக்கள் எதிர்பார்க்கும் இலவசங்களை அறிவிப்பதன் மூலம் வாக்குகளை கவரலாம் என்பது ஆளுங் கட்சியின் கணக்கு. கூட்டணி கட்சிகள் தேவையின்றி சுமையாக உள்ளன. அவர்களுக்கு கூடுதல் இடங்களை கொடுத்து விட்டு, தன்னுடைய கட்சியினரை பணியாற்ற சொல்வதை திமுக தலைமை விரும்பவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும், கூட்டணி கட்சிகளை சுமந்து செல்வதால் நமக்கு என்ன லாபம் என்ற எண்ணமும் தோன்றி இருக்கிறது. ராமதாசின் பாமக,தேமுதிக கூட்டணிக்கு வர வாய்ப்பு இருப்பதால், போக விரும்புவோர் போகட்டும் என்ற மனநிலையில் திமுக தலைமை இருப்பதாக கூறப்படுகிறது.
=====