திமுக கூட்டணியில் அலப்பறை :
VCK Seats Allocation in TN Assembly Election 2026 : சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், திமுக கூட்டணியில் படிப்படியாக சலசலப்பு படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. கூடுதல் தொகுதிகள் கேட்பதில் கூட்டணி கட்சிகள் உறுதியாக இருக்கின்றன. திமுகவால் அப்படி கொடுக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் :
தொடர்ந்து திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 6 இடங்களில் போட்டியில் 4ல் வெற்றி பெற்றது. பின்னர் 2024 மக்களவை தேர்தலிலும் 2 தனித்தொகுதி, ஒரு பொதுத்தொகுதி கேட்டு போராடினாலும், கடைசியாக திமுக இரண்டு தனித்தொகுதிகளை மட்டுமே ஒதுக்க, அவற்றி வெற்றி பெற்றது விடுதலை சிறுத்தைகள் கட்சி.
இரண்டு மடங்கு தொகுதிகள் கிடைக்குமா? :
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இரண்டு மடங்கு தொகுதிகளை திமுக கூட்டணியில் கேட்டுப் பெற வேண்டும் என்பது, விடுதலை சிறுத்தைகளில் விருப்பமாக உள்ளது. பானைச் சின்ன அங்கீகாரம் இருந்தாலும், அதை தக்க வைத்துக் கொள்ள கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் விடுதலை சிறுத்தைகளுக்கு எழுந்துள்ளது. இதேபோன்ற நிலைதான் மதிமுகவிற்கும்.
இரட்டை இலக்க தொகுதிகள் - விசிகவுக்கு நெருக்கடி :
குறைந்த பட்சம் 8 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அப்படியென்றால், இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். அந்த வகையில் விசிகவின் வளர்ச்சியை முன்வைத்து திமுகவிடம் தொகுதியை கேட்டுப் பெறுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான அழுத்தங்களை முதல்வரை சந்திக்கும் போதும், திமுக மூத்த நிர்வாகிகள் மத்தியிலும் விசிகவினர் முன்வைத்து வருகின்றனர்.
வலுப்பெறும் அதிமுக கூட்டணி :
மறுபக்கம் அதிமுக கூட்டணியும் நாளுக்கு நாள் வலுவாக மாறி வருகிறது. அவர்கள் அரசு செய்யும் தவறுகளை ஒன்று விடாமல் மக்களிடம் எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். இது திமுக அரசுக்கு நெருக்கடியை அதிகரிக்க செய்து இருக்கிறது.
நெருக்கடியை சமாளிக்குமா திமுக? :
எனவே, கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் திமுகவுக்கு முக்கியம் . யார் வெளியேறினாலும் அதன் பாதிப்பு ஒரு சில தொகுதிகள் என்று விட்டுவிட முடியாது. அது ஆட்சி மாற்றத்திற்கே கூட வழிவகுத்து விடலாம். இதை புரிந்து கொண்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களுக்கு இரட்டை இலக்க தொகுதிகளில் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கூட்டணி கட்சிகளை விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றால், கூடுதல் தொகுதிகளை கொடுக்கும் திமுக தனக்கான தொகுதிகளை குறைத்தே ஆக வேண்டும். இதை நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்களா என்பதும் கேள்விக்குறிதான்.
====