செப்டம்பர் 30 வரை இலவசமாகப் புதுப்பிக்க வாய்ப்பு
நாடு முழுவதும் இதுவரை 2 கோடி பள்ளி மாணவர்களின் ஆதார் பயோ-மெட்ரிக் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 5 வயது குழந்தைகள் முதல் 17 வயதுடையவர்கள் வரை இந்த பயோ-மெட்ரிக் புதுப்பிப்பு முற்றிலும் இலவசமாகச் செய்யப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
'பால் ஆதார்' மற்றும் பயோ-மெட்ரிக் விதிமுறைகள்
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்: புகைப்படம் மற்றும் அடிப்படை விவரங்கள் மட்டுமே கொண்டு 'பால் ஆதார் அட்டை' (Baal Aadhaar) வழங்கப்படுகிறது; இவர்களுக்கு கைரேகை மற்றும் கருவிழிப் பதிவு செய்யப்படுவதில்லை.
கட்டாயப் புதுப்பிப்பு
குழந்தைகள் 5 வயதைக் கடக்கும்போது முதல்முறையாகவும், பின்னர் 15 வயதில் மீண்டும் ஒருமுறையும் ஆதார் மையங்களுக்கு சென்று கட்டாயமாக பயோ-மெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும்.
மாநில அரசுகளுடன் இணைந்து இதுவரை 1.56 லட்சம் பள்ளிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 2 கோடி மாணவர்களுக்கு இந்த அப்டேட் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
ஆதார் புதுப்பிப்பின் முக்கியத்துவம்
அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை மற்றும் இதர சலுகைகளைப் பெற பயோ-மெட்ரிக் புதுப்பிப்பு மிகவும் அவசியம்.
நுழைவுத் தேர்வுகள்
நீட் , ஜேஇஇ, க்யூட் போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எழுதும்போது ஏற்படும் அங்கீகாரச் சிக்கல்களைத் தவிர்க்கவும் இது பயன்படுகிறது.
புதுப்பிக்கும் வழிமுறைகள்
ஆதார் பயோ-மெட்ரிக் புதுப்பிப்பை இணையவழியில் செய்ய முடியாது.
பெற்றோர்கள் 'புவன் ஆதார் போர்டல்' (Bhuvan Aadhaar Portal) மூலம் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தைக் கண்டறியலாம்.
குழந்தையின் தற்போதைய ஆதார் அட்டையுடன், குழந்தையையும் நேரடியாக மையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
அங்குக் கைரேகைகள், கருவிழிப் படலம் மற்றும் புதிய புகைப்படம் ஆகியவை பதிவு செய்யப்படும்.
பதிவு முடிந்ததும் வழங்கப்படும் 'புதுப்பிப்பு கோரிக்கை எண்' (URN) கொண்ட ஒப்புதல் சீட்டைக் கொண்டு கோரிக்கையின் நிலையைக் கண்காணித்துக் கொள்ளலாம்.
======