https://x.com/drramadoss/
தமிழ்நாடு

’என் மூச்சு இருக்கும்வரை’ நானே தலைவர் : ராமதாஸ் அதிரடி

பாமகவின் தலைவராக இறுதி மூச்சுவரை நானே நீடிப்பேன் என்று, டாக்டர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Kannan

ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது முடிவுக்கு வரும் என்ற தொண்டர்களின் எதிர்பார்ப்பும் பொய்யாகி விடுமோ என்ற அச்சம் எழுந்து இருக்கிறது.

ஒருபக்கம் அன்புமணி ஆதரவாளர்களை நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமிக்கிறார்.

மறுபக்கம், நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அதே பதவி வழங்கி அன்புமணி அழகு பார்க்கிறார்.

இவர்களில் யார் உண்மையான பாமக, நிர்வாக ரீதியாக யாருக்கு அதிகாரம் என்பதில், பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மாவட்டங்களில் கட்சியின் பொதுக்குழு கூட்டம், அடுத்த மாதம் நடைப்பயணம் என அன்புமணி தீவிரம் காட்ட, மறுபக்கம் தைலாபுரம் தோட்டத்திற்கு வரவழைத்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார் ராமதாஸ்.

மாவட்ட செயலாளர்களை நேற்று அழைத்து விவாதித்த ராமதாஸ், தன்னிடம் இருப்பவர்களுக்கு மட்டுமே, சட்டமன்ற தேர்தலில் சீட் என்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

அன்புமணியை ஆதரித்தால், சீட் கிடையாது என்பது சூசகமாக அவர் உணர்த்து இருக்கிறார்.

இந்தநிலையில், தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ்,

அன்புமணி உடனான பிரச்சனை குறித்து பேசினோம், பேசிக்கொண்டே இருக்கிறோம் என நக்கலாக பதில் கூறினார்.

எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு,அந்த முடிவு வரலாம்.

அன்புமணி மன்னிப்பு கேட்பது பிரச்சினையே அல்ல.

நான் தொடங்கிய கட்சியில் நான் சொல்கிறபடி அவர் செயல்பட வேண்டும்.

என் மூச்சு இருக்கும்வரை பாமகவுக்கு நானே தலைவர், அன்புமணி செயல் தலைவர்தான் என்று ராமதாஸ் திட்டவட்டமாக அறிவித்தார்.

=====