12ம் வகுப்பு பொதுத்தேர்வு
in conjunction with the Tamil Nadu Assembly elections, the annual examinations for classes 1 to 9 are scheduled to be completed by April 17th : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கியது.
மார்ச் 26ம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது. பின்னர் 12-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தம் செய்யும் பணி ஏப்ரல் 9 முதல் தொடங்கி ஏப்ரல் 20 வரை நடத்தப்பட இருக்கிறது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு
அதேபோன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்பிறகு, விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறும்.
1 - 9 வகுப்புகளுக்கு ஆண்டுத் தேர்வு
இந்நிலையில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே வெளியிட்ட வருடாந்திர நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடத்தப்பட்டு, மே 4ம் தேதி முடிவு வெளியாக உள்ளது.
வாக்குப்பதிவு மையங்களாகும் பள்ளிகள்
சட்டப்பேரவை தேர்தல் காரணமாக பள்ளி கட்டிடங்கள் வாக்குச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்படவுள்ளன. இதனால், கல்வி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படாத வகையில், தேர்வு தேதியில் மாற்றம் செய்து முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள்
மேலும் ஆசிரியர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதால், பள்ளிகளுக்கான தேர்வு அட்டவணையில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளது.
ஏப்.17க்குள் தேர்வுகள் முடிப்பு?
முழு ஆண்டுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித் துறை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அதாவது 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 17ம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விரைவில் புதிய அட்டவணை
இதற்கான விரிவான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு, துறை செயலரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாக வாய்ப்புள்ளது.
கோடை விடுமுறை 44 நாட்கள்
முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு எப்போதும் இல்லாத வகையில் இம்முறை கோடை விடுமுறை 44 நாட்கள் கிடைக்க உள்ளதால் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
====================