DVAC informed High Court. irregularities taken place over past three years in procurement of books for libraries source:thamizhalai,ai generated
தமிழ்நாடு

"3 ஆண்டுகளாக நூல்கள் கொள்முதலில் முறைகேடு” : மேலும் 2 போலி நிறுவனங்கள் : நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை.!

நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் மூன்று ஆண்டுகளாக முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Kannan

பெரியார் அறிவுலகம்

கோவை பெரியார் அறிவுலகத்துக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் இ.பரந்தாமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அகல்விளக்கு, ஃபீனிஸ்க் பதிப்பகங்கள்

அந்த மனுவில், அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,

புத்தகக் கொள்முதலில், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என கடந்த 7-ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அளித்த புகார் மீது இதுவரை எந்தவொரு குற்ற வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என கூறப்பட்டிருந்தது.

காவல்துறை சார்பில் அறிக்கை

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு, பல அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக 2 போலி பதிப்பகங்கள்

கைது செய்யப்பட்டுள்ள அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை காவலில் எடுத்து விசாரிக்கப்படவுள்ளார். இந்த முறைகேட்டில் சிக்மா மற்றும் வித்யா ஆகிய இரு பதிப்பகங்களுக்குத் தொடர்புள்ளது.

அகல் விளக்கு பதிப்பகத்துக்கு ரூ.1.74 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது, அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

3 ஆண்டுகளாக புத்தக கொள்முதலில் ஊழல்

லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் இந்த முறைகேடு தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள் முன்வந்தால், அவர்களுடைய வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும்.

பெரியார் அறிவுலகம் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் இதுபோன்ற புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த முறைகேடு நடந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலி புத்தகங்கள் அகற்றம்

இந்தப் புத்தகங்கள் அனைத்தும் நூலகங்களில் இருந்து அகற்றப்பட்டுவிட்டதாகவும், உயர்நீதிமன்றம் 2024-ஆம் ஆண்டு வகுத்துக் கொடுத்த கொள்முதல் கொள்கையைப் பின்பற்றியிருந்தால், இந்த முறைகேட்டைத் தவிர்த்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

அவகாசம் கேட்ட லஞ்ச ஒழிப்புத்துறை

இந்த வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதுதொடர்பான உத்தரவு நகலைத் தாக்கல் செய்ய லஞ்சஒழிப்புத் துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறையின் உத்தரவாதத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, விசாரணையை 25ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளார்.

==================