Edappadi Palaniswami Criticizes TVK Government Over Nadanthai Vaazhi Kaveri Scheme
தமிழகத்தில் முடங்கிக் கிடக்கும் ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தை மத்திய அரசின் துணையோடு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் எனத் தவெக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட உன்னதத் திட்டம்
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தின் பின்னணி மற்றும் அதன் முக்கியத்துவத்தையும் விவரித்துள்ளார்.
‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தின் நோக்கம்
தமிழக காவிரிப் படுகைகள் வளம் பெறவும், காவிரி ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளைப் புத்துயிர் பெறச் செய்தல், மேம்படுத்துதல் மற்றும் மாசுபடுவதில் இருந்து முழுமையாக மீட்டெடுத்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
அதிமுகவின் கடந்தகால முன்னெடுப்பு
கடந்த 2019-ஆம் ஆண்டு தனது தலைமையிலான அதிமுக அரசு இத்திட்டத்தை முன்னெடுத்ததாகவும், இதற்காக ரூ.11,250 கோடி மதிப்பீட்டில் முதல்நிலை திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, பாரதப் பிரதமரிடம் தாம் நேரில் வழங்கி வலியுறுத்தியதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் அங்கீகாரம்
மேலும் கொள்கை அளவில் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையிலேயே இதனை சேர்த்து அறிவித்தது. பின்னர் ஹைதராபாத்தில் உள்ள சுற்றுச்சூழல், பாதுகாப்புப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம் தொழில்நுட்ப அனுமதியும் பெறப்பட்டது.
திமுக அரசை சாடிய எடப்பாடி
கடந்த 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையிலும், அதிமுக அரசின் தீவிர முயற்சியால் கடந்த 2024-ஆம் ஆண்டு இத்திட்டத்தின் முதற்கட்டப் பணிகளுக்காக மத்திய அரசு சுமார் ரூ. 935 கோடிக்கு ஒப்புதல் அளித்தது. இதற்கு மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி செலவிட ஒப்புக்கொள்ளப்பட்டது.
திமுக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை
ஆனால், கடந்த கால திமுக அரசு 2024 முதல் ஆட்சியை விட்டு இறங்கும் வரை இத்திட்டத்திற்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.
5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாயைக் கடனாகப் பெற்று வீண் விரயம் செய்த திமுக அரசு, மாநில அரசின் நிதியை ஒதுக்காமல், மத்திய அரசின் பங்கையும் பெறாமல் இத்திட்டத்தை கிடப்பில் போட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தவெக அரசை நோக்கிய விமர்சனக் கணைகள்
மேலும் தற்போது ஆட்சியில் இருக்கும் தவெக அரசை நோக்கி எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.
ரீல்ஸ் விடுவதை நிறுத்துங்கள்
"‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற சித்தாந்தத்தை நாவளவில் சொல்லி, தங்களை ‘தூய சக்தி’ என்று அழைத்துக்கொண்டு, தமிழகத்தில் மாற்றம் கொண்டு வருவோம் என்ற முழக்கத்துடன் ஆட்சியில் அமர்ந்துள்ள தவெக அரசு, தமிழக மக்களுக்காக புதிதாக எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
‘நடந்தாய் வாழி காவேரி'
மக்கள் விரோத திமுக அரசால் முடக்கி வைக்கப்பட்ட ‘நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை’ உடனடியாகத் துவங்கினால் போதுமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “வாய்ச் சவடால் அடிப்பது, ரீல்ஸ் விடுவது, குதிரை பேரம் நடத்தி ஆட்சியைக் காப்பாற்ற முயல்வது போன்ற தகிடுதத்த வேலைகளையெல்லாம் கைவிட்டுவிட்டு,
விவசாயப் பெருமக்களுக்கும், குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தை செயல்படுத்துமாறு தவெக அரசின் ‘கனவுலக முதலமைச்சரை’ வலியுறுத்துகிறேன்,” என எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
=====