DMK IT wing in government jobs: Edappadi Palaniswami opposes 
தமிழ்நாடு

அரசுப்பணிகளில் திமுக ஐடி விங் : எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு

EPS on DMK IT Wing : உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களில் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பணியாளர்களை தகுதியின்றி நியமிக்க முயல்வதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

MTM

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை :

Edappadi Palanisamy on DMK IT Wing : தமிழ்நாட்டில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களில் நியமனம் செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களுடன் கூடிய தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது. அத்தீர்ப்புகளை மீறி மு.க.ஸ்டாலின் மாடல் அரசு, திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு(DMK IT Wing) பணியாளர்களை தகுதியின்றி நியமிக்க முயல்வதாக செய்திகள் வருகின்றன. இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு இளங்கலை பட்டப் படிப்புடன், பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது மீடியா சயின்ஸ் படிப்பு கட்டாயமாக்கப்பட்ட அரசாணையை திரும்பப் பெற திமுக அரசு முடிவெடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது. இது, தகுதியற்றவர்களையும், ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களையும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு நியமிக்கும் திமுக அரசின் மோசமான முயற்சியாகவே கருதப்படுகிறது.

திமுக அரசு இந்த அடிப்படைத் தகுதிகளை புறக்கணித்து, திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச்(DMK IT Wing) சேர்ந்தவர்களை, பத்திரிகைத் துறையில் எந்த அனுபவமோ கல்வித் தகுதியோ இல்லாமல், தேர்தல் ஆதாயத்திற்கு இவர்களைப் பயன்படுத்துவதற்கான உள்நோக்கமாகவே தோன்றுகிறது.

பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் கல்வி கற்று, வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைத் தகர்க்கும் இந்த முடிவு, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தைப் பறிப்பதாக உள்ளது.

இதற்கு மாணவர்கள் மற்றும் பத்திரிகைத் துறையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளை மதித்து, தற்காலிக நியமனம் என்ற பெயரில் தகுதியற்றவர்களை நியமிக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், 2022-ஆம் ஆண்டு இந்த அரசு வெளியிட்ட அரசாணையின்படி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(APRO Job) பணிக்கு பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது மீடியா சயின்ஸ் துறையில் குறைந்தபட்சம் டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பு முடித்தவர்களை தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்(TNPSC) மூலம் மட்டுமே நியமிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.