தீவிரம் பெற்றுள்ள பரப்புரை
2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் தற்போது தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 11 நாட்களே எஞ்சியுள்ளதால், அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக் கட்ட பிரச்சாரத்தை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி பரப்புரை
அந்தவகையில், அதிமுக (AIADMK Party) பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்."ஸ்டாலின் தன்னை முதலமைச்சராகவே நினைத்துக் கொள்ளவில்லை.
இபிஎஸ்ஸை எந்தெந்த விதத்தில் அவதூறு பேசலாம் என்று யோசித்துப் பேசும் முதல்வராக இருக்கிறார்.
என்னை விமர்சிப்பது தான் வேலையா?
மக்களுக்கு நன்மை செய்யத்தானே அவரை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தார்களா அல்லது என்னை அவதூறு பேசுவதற்கா..?
நம் கட்சியைப் பற்றி பேச ஒன்றும் இல்லை, நமது அரசு பற்றி பேசவும் எந்த முகாந்திரமும் இல்லை.
இந்த 5 ஆண்டு காலம் ஆட்சியில் இருக்கும்போது, என்னை தொடர்ந்து விமர்சனம் செய்தார்.
நாங்கள் யாருக்கும் அடிமையில்லை
இப்போது தேர்தல் வந்து விட்டது. பரப்புரையை தொடங்கிய பிறகும் என்னைப் பற்றித்தான் விமர்சனம் செய்கிறார். நம் கட்சி பாஜகவிற்கு அடிமை என்கிறார். அப்படியா இருக்கிறது..?
எங்கள் கட்சி தொண்டன் கூட யாருக்கும் அடிமை கிடையாது. வடிவேல் நடித்த வின்னர் என்ற படத்தில் கட்டத்துரை என்ற கேரக்டர் வரும். இதற்கு மேல் நான் பேசினால் நன்றாக இருக்காது, ஏனென்றால் அவர் முதலமைச்சராக இருக்கிறார்.
அதனால் இதற்கு மேல் உள்ள வார்த்தைகளை நீங்களே பூர்த்தி செய்துகொள்ளுங்கள். அந்த கட்டத்துரை திருந்துகிற மாதிரியே இல்லை. நாகரீகம் கருதி இந்த நேரத்தில் அந்த நகைச்சுவையை மேற்கொண்டு சொல்லாமல் விடுகிறேன், எஞ்சிய வார்த்தைகளை நீங்களே பூர்த்தி செய்துகொள்ளுங்கள்.
.திமுகவிற்கு குடும்பமே முக்கியம்
மாநிலத்திலும் மத்தியிலும் திமுகவை பொறுத்தவரை அவர் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் உயர் பதவிக்கு வர முடியாது. அதிமுகவில் அப்படியல்ல. சாதாரண தொண்டன் இங்கே வந்து பேசமுடியும். நாம் எல்லாம் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்கள்.
அதிமுகவில் தொண்டர்கள் தான் முக்கியம்
நான் உங்களுடைய ஆதரவுடன், நிர்வாகிகள் ஆதரவுடன், தொண்டர்கள் ஆதரவுடன் இங்கே வந்து பேச முடிகிறது. இது அதிமுகவில் தான் சாத்தியம்.
அதிமுக ஜனநாயகக் கட்சி. அம்மா தெளிவாகச் சொன்னார்கள், எனக்கு பின்னாலும் அதிமுக நூறு ஆண்டுகள் தொடரும், மக்கள் பணி செய்யும் என்றார்கள்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
======================