தமிழக சட்டமன்ற தேர்தல்
Edappadi Palaniswami has said that the seat sharing in the AIADMK alliance will be known in 4 days and there is no problem : தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்காக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 6 வரை மனுதாக்கல் செய்யலாம்
தேர்தல் களம் அனல்பறக்க தொடங்கி விட்ட நிலையில், அதிமுக, திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்ய வேண்டி இருக்கிறது. அதன்பிறகே வேட்பாளர் தேர்வு நடைபெற்று, தலைவர்கள் களத்திற்கு செல்வார்கள்.
அதிமுக கூட்டணி
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் என்பதை இறுதி செய்ய, எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்தித்து பேசினார்.
அமித் ஷாவுடன் எடப்பாடி சந்திப்பு
அப்போது தொகுதி பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. பாஜக எதிர்பார்க்கும் தொகுதிகள், பாஜக அணியில் இடம்பெறும் சிறிய கட்சிகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இருவரும் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனர். பாஜகவுக்கு அதிமுக 29 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தொகுதி பங்கீடு - நாளை பேச்சுவார்த்தை
இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை பற்றி விளக்கம் அளித்தார்.
“தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நாளை தொடங்கும். தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்காக நாளை பியூஷ் கோயல் சென்னை வருகிறார். தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை. கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் எந்த சிக்கலும் இல்லை.
4 நாட்களில் எல்லாம் தெரியும்
4 நாட்களில் அனைத்தும் தெரியும். 4 நாட்களில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிந்து யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என அறிவிக்கப்படும்.
புதிய கட்சிகள் வர வாய்ப்பில்லை
தமிழக வெற்றிக் கழகத்துடன் நாங்களோ அல்லது அவர்கள் எங்களுடனோ கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதிமுகவுடன் சேர வேண்டிய கட்சிகள் சேர்ந்து விட்டன. இனி புதிய கட்சிகள் சேர வாய்ப்பில்லை.
வெற்றி வாய்ப்பு பிரகாசம்
தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து விட்டு, பிரசாரத்தை தொடங்க இருக்கிறோம். அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
அன்புமணி, தினகரன் டெல்லி பயணம்
அடுத்ததாக டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தமிழக சூழல் குறித்து பேசுவதற்கு டெல்லி வர இருக்கிறார்கள்” என்று எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்து இருக்கிறார்.
===============================