Edappadi Palaniswami said who started political party during retirement criticizes the AIADMK, the people will not accept  
தமிழ்நாடு

’ஓய்வு பெறும் காலத்தில் கட்சி’ : விஜய்யை வெளுத்த எடப்பாடி

'ஓய்வுபெறும் காலத்தில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள ஒருவர், அதிமுகவை விமர்சித்தால், மக்களே அதை ஏற்க மாட்டார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.

Kannan

எடப்பாடியை விமர்சித்த விஜய் :

மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் உரையாற்றிய நடிகர் விஜய், திமுக, பாஜகவை வெளுத்து வாங்கினார். எம்ஜிஆர் தொடங்கிய கட்சிக்கு சரியான தலைமை இல்லாததால், தொண்டர்கள் விரக்தியில் இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

திமுகவை வீழ்த்தவே அதிமுக :

இந்தநிலையில், தமிழகம் முழுதும் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி, காஞ்சிபுரத்தில் பொதுமக்களிடையே உரையாற்றினார்.

”தீயசக்தி திமுகவை வீழ்த்தவே, அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கினார். தமிழகத்தில் யார் புதிய கட்சி துவங்கினாலும், அ.தி.மு.க., தலைவர்களின் பெயரைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

விஜய்க்கு எடப்பாடி பதிலடி :

சிலர், அதிமுக யார் கையில் இருக்கிறது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு அரசியல் தெரியாது. அதனால், இப்படியெல்லாம் கேட்கின்றனர். இதுகூட தெரியாமல் கட்சிக்குத் தலைவராக எப்படி இருக்க முடியும்? நாட்டில் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்கு தெரியவில்லை.

கட்சி ஆரம்பித்தால் ஆட்சியை பிடிக்க முடியுமா ? :

ஒரு கட்சி ஆரம்பித்தவுடன் ஆட்சியை பிடித்து விட முடியாது. செடி உடனே மரமாகி விடாது. எடுத்தவுடனே எந்த இயக்கமும் மக்களுக்கு நன்மை செய்துவிட முடியாது. எம்ஜிஆர் கட்சி துவங்கி, ஐந்து ஆண்டு காலம் தன்னுடைய உழைப்பைக் கொடுத்து பணியாற்றினார். பின்புதான், ஆட்சியைப் பிடித்தார். ஜெயலலிதாவும் அப்படித்தான். எடுத்ததுமே முதல்வர் ஆகி விடவில்லை.

மக்களுக்கு உழைத்து தான் முதல்வரானார். தமிழகம் இந்தளவு உயர்ந்திருப்பதற்கு, 31 ஆண்டுகள் ஆட்சி செய்து அதிமுக மக்களுக்காக உழைத்தது தான் காரணம். எங்கள் ஆட்சியில் 10 ஆண்டுகளில் 17 அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கொண்டுவந்து வரலாற்று சாதனை படைத்தோம். 67 கலை அறிவியல் கல்லுாரி, 21 பாலிடெக்னிக் கல்லுாரி என நிறைய கல்லுாரிகளை திறந்தோம்.

சிலர் அறியாமையால் பேசுகிறார்கள் :

அறியாமையில் சிலர் பேசுகிறார்கள். அவர்கள் வந்து தான் மக்களைக் காப்பாற்ற போவது போல சினிமாக்காரர் ஒருவர், அடுக்குமொழியில் பேசி வருகிறார். யாரை சொல்கிறேன் என்பது சொல்லாமலேயே அனைவருக்கும் புரியும்.

ஓய்வு பெறும் காலத்தில் அரசியல் :

திரைப்படங்களில் நடித்து அதன் வாயிலாக வருமானம் பெற்று, ஓய்வுபெறும் காலத்தில் ஒருவர் அரசியல் கட்சி துவங்கி உள்ளார். அவர் அதிமுகவை விமர்சித்தால், மக்களே அதை ஏற்க மாட்டார்கள்.

உழைப்பு இல்லாமல் வெற்றி கிடைக்காது :

கட்சியில் கிளை கழகச் செயலராக பணியாற்றி, படிப்படியாக உயர்ந்து, இன்று மக்கள் முன் நிற்கிறேன் என்றால், இது உழைப்பால் விளைந்தது. ஆனால், சிலர் உழைப்பு எதுவும் இல்லாமலேயே வெற்றி பெற்று விடலாம் என நினைக்கின்றனர். அது நடக்காது; அப்படி வந்தாலும் நிலைக்காது.

திமுகவை வீழ்த்தும் சக்தி அதிமுகதான் :

திமுகவை வீழ்த்தும் சக்தி உள்ள ஒரே கட்சி, அதிமுக மட்டுமே. பொன்விழா கண்ட இந்த கட்சியை, எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது;.விமர்சிக்கவும் யாருக்கும் தகுதியில்லை. வரும் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சி அமைக்கும். மத்திய அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்துள்ளதற்கு அன்று அதிமுகவின் முன்னெடுப்பே காரணம்,” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

===========