Edappadi Palaniswami warned if TVK attempts to needlessly provoke ADMK, it will have to face consequence. google
தமிழ்நாடு

”அதிமுகவை சீண்டிப் பார்க்க நினைத்தால்?” : எதிர்வினை நிச்சயம்! : தவெகவிற்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை...

வீணாக அதிமுகவை சீண்டி பார்க்க நினைத்தால், அதற்கான எதிர்வினையை தவெக எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.

Kannan

அதிமுகவுக்கு பின்னடைவு

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அதிமுகவை கடுமையாக பாதித்து வருகிறது. சட்டசபையில் அக்கட்சியை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் தவெக அரசு ஆதரவு தந்து அதிர வைத்தனர்.

அடுத்தபடியாக 4 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் பகிரங்கமாக சேர்ந்தனர்.

தவெகவிற்கு தாவும் அதிமுகவினர்

முன்னாள் எம்பிக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் தவெக நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.

தவெக குதிரை பேரக் கட்சி

இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி சார்பில் அதிமுக வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “ கும்பகோணத்தில் அஇஅதிமுக தொண்டர்களின் உழைப்பால் வென்று கவுன்சிலர் ஆன ஆதிலட்சுமி, சமீபத்தில் குதிரை பேரக் கட்சியில் சேர்ந்த நிலையில், அஇஅதிமுக தொண்டர்கள் வியர்வை சிந்தி கொடுத்த கவுன்சிலர் பதவியை நீக்கக் கோரிய கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம. ராமநாதனின் வீட்டைச் சூழ்ந்து அடியாட்களோடு தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பதவியை துறந்து விட்டு செல்லுங்க

வெறும் கவுன்சிலர் பதவி சுகத்திற்காக இந்த இயக்கத்தின் தொண்டர்ளின் உழைப்பைச் சுரண்டி எடுத்துவிட்டு, இன்றைக்கு அதிகாரம் எங்கே இருக்கிறது என தேடி செல்பவர்கள், இந்த கட்சி கொடுத்த பதவியை துறந்துவிட்டு செல்வதில் என்ன தயக்கம்? இப்படி இன்னொரு கட்சி கொடுத்த பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பது ஒட்டுண்ணித்தனம் இல்லையா?

அதிமுக நிர்வாகியை தாக்குவதா?

கழகத்தின் மீதுள்ள உணர்வோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கு ஜனநாயக ரீதியாக பதில் சொல்ல வக்கில்லாமல், ஆட்களை ஏவி வீட்டை மறித்து தாக்குவது தான் இன்றைய ஆளுங்கட்சி அங்கீகரிக்கும் மாற்று அரசியலா?

எதிரிகளை தீர்மானிக்கும் ஆயுதங்கள்

எதிரிகள் தீர்மானிக்கும் ஆயுதங்களை எடுக்க எங்களுக்கும் நேரம் ஆகாது. அம்மாவின் வளர்ப்பு நாங்கள் என்பதால் அரசியல் நாகரீகத்தோடு எதையும் எதிர்கொள்ளும் உறுதியோடு இருக்கிறோம்.

எங்களை சீண்டி பார்க்காதீங்க

வீணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு நிர்வாகியையோ, தொண்டரையோ சீண்டிப் பார்க்க நினைத்தால், அதற்கான உரிய அரசியல் எதிர்வினைகளை இன்றைய கத்துக்குட்டி ஆளுங்கட்சி சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.

கடும் நடவடிக்கை தேவை

கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராம ராமநாதன் அவர்கள் வீட்டை மறித்து தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" என அந்த அறிக்கையில் அதிமுக வலியுறுத்தி இருக்கிறது.

================