ஜூன் 12ம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கர்நாடகாவில் அணைகள் நிரம்பி இருப்பதால், சுமார் 85,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
சாகுபடி பணிகள் தீவிரம் :
இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக சாகுபடி பணிகளில் டெல்டா விவசாயிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேசமயம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு 20 நாட்களை கடந்தும், இதுவரை கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் வந்து சேரவில்லை.
கடைமடைக்கு செல்லாத காவிரி :
இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “ காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு 20 நாட்கள் கடந்தும், கடைமடை பகுதிகளுக்கு செல்லவில்லை.
அங்கு, விவசாயிகள் நடவுப்பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடல் முகத்துவார சீரமைப்புக்காக ஆசிய வளர்ச்சி வங்கி, வழங்கும் நிதியை பெற, திமுக அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.
மேட்டூர் அணை நிரம்பி, உபரி நீர் கடலில் கலக்கும் சூழ்நிலையில், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாதது ஏன்? உரிய முறையில் தண்ணீரை விவசாயிகளிடம் சேர்ப்பதில், திமுக அரசுக்கு என்ன சிக்கல்?” என்று அவர் வினவியுள்ளார்.
====