Train Cancellations? Yet Again? Changes to Electric Train Services Until April 8! source : google
தமிழ்நாடு

எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்புப் பணி: ரயில்கள் ரத்து? மீண்டும் மீண்டுமா? ஏப்.8 வரை மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்!

ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 8 ஆம் தேதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

S Kavitha

எழும்பூர் பராமரிப்பு பணி

எழும்பூர் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால் நேற்றுமுதலே புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. இதனால் ரயில் பயணிகளும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 8 ஆம் தேதிவரை

இந்நிலையில் நடைமேடை பணிகள் காரணமாக மீண்டும் புறநகர் மின்சார ரயில்கள் ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 8 ஆம் தேதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11 ஆம் நடைமேடையில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக, ஏப்ரல் 8 வரை சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரயில் சேவைகளில் தெற்கு ரயில்வே மாற்றங்களைச் செய்துள்ளது.

6 மணி நேரப் பராமரிப்புப் பணிகள்

பயணிகள் பாதுகாப்பு மற்றும் கட்டுமானப் பணிகளைக் கருத்தில்கொண்டு, குறிப்பிட்ட நாட்களில் இரவு 11:00 மணி முதல் அதிகாலை 05:00 மணி வரை 6 மணி நேரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாகப் பின்வரும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:

ரயில் சேவைகள் ரத்து

ஏப்ரல் 5 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இருமார்க்கங்களிலும் இயக்கப்படும் 8 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், ஏப்ரல் 4, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இரவு நேரங்களில் இயக்கப்படும் 3 ரயில்களும், ஏப்ரல் 4, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அதிகாலை 05:50 மணிக்கு இயக்கப்படும் ஒரு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பகுதி நேர ரத்து மற்றும் மாற்றங்கள்

செங்கல்பட்டு, திருமால்பூர் மற்றும் கூடுவாஞ்சேரியிலிருந்து சென்னை கடற்கரை நோக்கி வரும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். 9.45, 10.0, 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் பகுதி நேரமாக தாம்பரம் முதல் கடற்கரை வரையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மறுமார்க்கத்தில், சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட வேண்டிய சில ரயில்கள் தாம்பரத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கும்.

பராமரிப்புப் பணிகள் முடிந்த பிறகு, அனைத்து ரயில்களும் வழக்கமான அட்டவணைப்படி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்.8-ஆம் தேதிக்குப் பிறகு சேவைகள் முழுமையாகச் சீராகும்

இருப்பினும், ஏப்ரல் 8-ஆம் தேதிக்குப் பிறகு சேவைகள் முழுமையாகச் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் இந்த மாற்றங்களைக் கவனித்துத் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

southern railway