Elderly people, children, pregnant women advise to avoid attending public meeting of TVK Leader Vijay on 23rd in Vellore Source : Google
தமிழ்நாடு

TVK Meeting in Vellore : 23ம் தேதி தவெக விஜய் பொதுக் கூட்டம் : ஏற்பாடுகள் தீவிரம், பொதுமக்களுக்கு அறிவுரை

TVK Meeting in Vellore : வேலூரில் 23ம் தேதி விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில், பங்கேற்பதை வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வருவதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

Kannan

தமிழக சட்டமன்ற தேர்தல் களம்

TVK Meeting in Vellore : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. ஏப்ரல் மாதம் வாக்குப்பதிவு நடைபெற்று, மே மாதம் முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகம்

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி நடிகர் விஜய், இரண்டு மாநாடுகளை பிரமாண்டமாக நடத்தியதோடு, மக்கள் சந்திப்பு கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.

வேலூரில் தவெக பொதுக்கூட்டம்

அண்மையில் சேலத்தில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றினார். அந்த வகையில், வரும் 23ஆம் தேதி தவெக விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.

அகரம்சேரி பகுதியில் பொதுக்கூட்டம்

இதற்காக, வேலூரை அடுத்த பள்ளிகொண்டா அகரம்சேரி பகுதியில் மைதானத்தை சீர் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அங்குள்ள செடி, கொடிகள் அகற்றும் பணிகள் உள்ளிட்டவை மும்முரமாக நடந்து வருகின்றன.

காவல்துறையினர் அனுமதி கடிதம்

தவெக பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி கோரி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமனிடம் இன்று கடிதம் அளிக்கப்பட்டது. விரைவில் அனுமதி கிடைக்கும் என்று தெரிகிறது.

காவல்துறை விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் 100 சதவீதம் கடைப்பிடிப்போம் என தவெகவின் தெரிவித்துள்ளனர்.

மக்கள் சந்திப்பிற்கு வரும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டு வருகின்றன.

25,000 பேர் பங்கேற்பார்கள்

மொத்தம் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய இந்த மக்கள் சந்திப்புக்கு, சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், மொத்தமாக 25,000 பேர் கலந்து கொள்வார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம் சிறப்பு ஏற்பாடுகள்

வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால், ஒவ்வொரு கேலரிக்கும் தனித்தனியாக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படும். ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு 50 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் உட்பட ஒரு மினி மருத்துவமனை அமைக்கப்படும். அவசர நிலைக்கு 10 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும்.

அனைத்து அடிப்படை வசதிகளும், பாதுகாப்புடன் செய்யப்பட்டு, ஆறு இடங்களில் 20 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

வயதானோர், குழந்தைகளுக்கு அனுமதியில்லை

பாதுகாப்பு கருதி வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் போன்றோர் கூட்டத்திற்கு வருவதை தவிர்க்கவும், சென்னையில் வேலூருக்கு விஜய் சாலை மார்க்கமாக வரவுள்ளதால், இளைஞர்கள் யாரும் வாகனங்களில் பின் தொடர வேண்டாம் என கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வேலூரில் காலடி வைத்தால், கோட்டையில் கொடி பறக்கும்

அதேசமயம் கட்சி தொடங்கிய பிறகு, முதல்முறையாக விஜய் வேலூர் மண்ணுக்கு வருகிறார். எனவே, இந்நிகழ்ச்சி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

‘வேலூர் கோட்டையில் கால் வைக்கும் அனைவரும் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றுவார்கள்’ அதன் அடிப்படையில், வேலூர் விஜய்க்கு வெற்றியின் தொடக்கமாக அமையும்” என தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

====