வரைவு வாக்காளர் பட்டியல்
Election Commission Notice to 1 Million Voters in Tamil Nadu : அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தமிழகத்தில் SIR எனப்படும், தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதைத்தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதன்படி, இறந்தவர்கள் இரட்டை பதிவு, கண்டறிய முடியாதவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் உட்பட சுமார் 97 லட்சம் பேரின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
சிறப்பு முகாம்கள்
இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் விடுப்பட்டவர்கள், 18 வயது நிரம்பி புதிதாக பட்டியலில் சேர விரும்புபவர்கள், ஜனவரி 18ம் தேதி வரை படிவங்களை பூர்த்தி செய்து அளிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது. இதற்காக நாளையும், நாளை மறுநாள், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன.
வாக்காளர்களுக்கு நோட்டீஸ்
இதனிடையே, சமர்பிக்கப்பட்ட படிவங்களில் முறையான விவரங்களை தெரிவிக்காத சுமார் 10 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்(EC Notice To Voters in Tamil Nadu) அனுப்பியுள்ளது. எஸ்.ஐ.ஆர் பணிகளில் வழங்கப்பட்ட படிவங்களில் வாக்காளர்கள் தங்களுடைய பெயரோ அல்லது உறவினர்கள் பெயர்கள் 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தால் அந்தத் தகவல்களை படிவங்களில் குறிப்பிட வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்
படிவங்களை முறையாக பூர்த்தி செய்யாத வாக்காளர்கள் 2002 மற்றும் 2005 அப்போதைய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த உறவினர்கள் பெயரை குறிப்பிடாத சுமார் பத்து லட்சம் வாக்காளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
நிரந்தர குடியிருப்பு சான்றிதழ்
இந்த நிலையில் நிரந்தர குடியிருப்புச் சான்றிதழ் ஆவணமாக கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. எனவே, அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
அதன்படி, எஸ் ஆர் பணிகளில் படிவங்களை பூர்த்தி செய்வதில் தவறிழைத்த வாக்காளர்கள், நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் கோரி ஆன்லைனில் விண்ணப்பித்தால், மண்டல தாசில்தார் வாக்காளர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
கட்டணமின்றி சான்றிதழ்
இன்று முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை எஸ் ஐ ஆர் படிவங்கள் தொடர்பாக கூடுதல் ஆவணங்கள் கோரி வாக்காளர்கள் விண்ணப்பித்தால் உரிய சான்றிதழ்களை கட்டணம் இல்லாமல் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுதியுள்ள வாக்காளர்கள் - தேர்தல் ஆணையம்
சென்னையில் சுமார் இரண்டரை லட்சம் வாக்காளர்கள், திருவள்ளூரில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் என தமிழகம் முழுவதும் 10 லட்சம் வாக்காளர்கள் படிவங்களை முறையாக பூர்த்தி செய்யாமல் உள்ளதாக தெரிகிறது. எனவே, அவர்கள் கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், தேர்தல் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, கூடுதல் ஆவணங்களை பெற்று தகுதியுள்ள வாக்காளர்களை பட்டிலில் சேர்க்கும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
----------------------------