Engineering Admissions: Not a single student enrolled in 146 colleges during the first round!
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான இன்ஜினியரிங் கலந்தாய்வின் முதல் சுற்று முடிவடைந்துள்ள நிலையில், 146 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூடச் சேரவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கலந்தாய்வு நிலவரம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு கடந்த 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், சேர்க்கை தொடர்பான முக்கியத் தரவுகள் வெளியாகியுள்ளன.
ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் சேர்க்கை
கலந்தாய்வில் பங்கேற்ற கல்லூரிகளில் 146 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 6 அரசு கல்லூரிகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில், ஒவ்வொரு துறைகளிலும் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
கல்லூரி சேர்க்கை விவரங்கள்
மேலும் பிற கல்லூரிகளில் 23 கல்லூரிகளில் 60 சதவீதம் வரையிலும், 32 கல்லூரிகளில் 40 சதவீதம் வரையிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
பாடப்பிரிவுகளின் தேவையும் கல்வி ஆலோசகர் கருத்தும்
இன்ஜினியரிங் கலந்தாய்வு குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவிக்கையில், மாணவர்கள் சி.இ.ஜி, எம்.ஐ.டி, கோவை சி.ஐ.டி, பி.எஸ்.ஜி மற்றும் ஏ.சி.டெக் ஆகிய முன்னணி கல்லூரிகளைத் தேர்வு செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிக விருப்பம் பெற்ற பிரிவுகள்
முதல் சுற்றில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் ஆகிய பாடப்பிரிவுகளுக்கே முதன்மை முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
சரிவை சந்தித்த பிரிவுகள்
சிவில், ஏரோநாட்டிக்கல், கெமிக்கல், பயோ டெக்னாலஜி, செராமிக், பெட்ரோலியம், ஜவுளி, ஃபேஷன் மற்றும் லேதர் உள்ளிட்ட 20 பாடப்பிரிவுகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.
'கட் ஆஃப்' மதிப்பெண்
200/200 கட் ஆஃப்: 200-க்கு 200 'கட் ஆஃப்' மதிப்பெண்கள் பெற்ற 52 மாணவர்களில், 38 பேர் மட்டுமே முதல் சுற்றில் இடங்களைப் பெற்றுள்ளனர்.
200-க்கு 195 'கட் ஆஃப்' பெற்ற 2,151 மாணவர்களில், 1,506 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.
விடுபட்ட மாணவர்கள் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவப் படிப்புகளைத் தேர்வு செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர்.
காலி இடங்கள் கணிப்பு
மூன்று சுற்று கலந்தாய்வுகள் முடிவடையும் போது, சுமார் 40,000 பி.இ. / பி.டெக். இடங்கள் காலியாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
=====