தொழில் துறையினருடன் கலந்துரையாடல் :
தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி, தொழில் அமைப்பினர், விமான நிலைய விரிவாக்கத்துக்கு இடம் கொடுத்தவர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், தங்க நகை தொழிலாளர்கள் சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
திமுக அரசுக்கு கண்டனம் :
அவற்றை கவனமுடன் கேட்டுக் கொண்ட அவர், குறு, சிறு தொழில்களுக்கு அதிமுக ஆட்சியில் முன்னுரிமை அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். தற்போது, தொழில் செய்ய முடியாத சூழல் நிலவுவதாக புகார்கள் வருவதை குறிப்பிட்ட எடப்பாடி, கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை எனக் கண்டனம் தெரிவித்தார்.
தொழில்துறையை காப்பாற்றிய அதிமுக அரசு :
இருக்கிற பிரச்னைகளையும் தீர்ப்பதாக இல்லை, புதிய பிரச்னைகளை சமாளிக்கவும் திமுக அரசால் முடியவில்லை என்று அவர் விமர்சித்தார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரு புறம் வறட்சி, ஒரு புறம் புயல் வெள்ளம், கொரோனா என பேரிடர்கள் நிகழ்ந்தாலும் தொழில்துறை நலிவடையாமல் பார்த்துக் கொண்டோம்.
சிக்கலை ஏற்படுத்துவதே திமுகவின் வேலை :
விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்தோம். குடிமராமத்து திட்டம் கொண்டு வந்து, நீர்நிலைகளை பாதுகாத்தோம். விமான நிலைய விரிவாக்கத்தை பொறுத்தவரை, தொழில் நகரான கோவைக்கு விரிவாக்க நடவடிக்கைகள் அவசியம். எல்லாவற்றிலும் சிக்கலை ஏற்படுத்தும் திமுக அரசு, இதிலும் சிக்கலை ஏற்படுத்தியது. பணிகள் முடங்கின.
ஆட்சிக்கு வந்தால் - எடப்பாடி வாக்குறுதி :
அதிமுக ஆட்சிக்கு வந்ததும், விரிவாக்கப் பணி துரிதமாக நிறைவடையும். சுய உதவி குழுவினரின் கோரிக்கை கனிவோடு பரிசீலிக்கப்படும். ஸ்கூட்டர் மானியம் மீண்டும் வழங்கப்படும். கிரில் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை, சம்பந்தப்பட்ட துறையோடு கலந்து பேசி தீர்வு காண்போம்.
தொழில்துறையினரின் நிலைக்கட்டணம் உட்பட அனைத்து கோரிக்கைகளும் கனிவுடன் பரிசீலிக்கப்படும். தொழில்துறை மட்டுமின்றி, அனைத்து துறையினரின் மனதையும் குளிரச் செய்வோம், இவ்வாறு எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.
-----