EPS questioned whether Chief Minister Stalin will come forward to conduct a proper investigation into the Rs 1,020 crore corruption  
தமிழ்நாடு

ரூ.1,020 கோடி ஊழல், நேர்மையான விசாரணை : முதல்வருக்கு EPS கோரிக்கை

நகராட்சி நிர்வாகத்துறையில் 1,020 கோடிக்கு ஊழல் நடந்திருப்பது பற்றி, உரிய விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் முன்வருவாரா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Kannan

ரூ.1,020 கோடி ஊழல் விவகாரம்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என். நேரு பொறுப்பு வகித்து வருகிறார். இந்த துறையில், பணி நியமனம், டெண்டர் உள்ளிட்டவை மூலம் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்து இருப்பதாக தமிழக டிஜிபிக்கு கடந்த மாதம் அமலாக்கத்துறை கடிதம் எழுதி இருந்தது.

அமலாக்கத்துறை கடிதம்

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க நிலையில் 2வது முறையாக தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பி இருக்கும் அமலாக்கத்துறை, தமிழக லஞ்ச ஒழிப்பு தலைமை இயக்குனருக்கும் இது தொடர்பாக கடிதம் எழுதி இருக்கிறது.

ஊழல் - டிஜிபிக்கு கடிதம்

இந்த விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ” நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாக தமிழக பொறுப்பு டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

டெண்டர் மூலம் கமிஷன்

ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அமைச்சர் தனது உறவினர்கள் வாயிலாக டெண்டருக்கு 7.5% முதல் 10% வரை கமிஷன் கொள்ளை அடித்துள்ளது, இக்கடிதம் வாயிலாக வெளிவந்துள்ளது.

கழிப்பறை முதல் வங்கிகள் வரை

கழிப்பறை கட்டுவது முதல், நபார்ட் வங்கி திட்டங்கள் வரை பட்டியல் போட்டு, 20%- 25% வரை பல்வேறு நிலைகளில் இந்த மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இதெல்லாம் "Tip of the Iceberg" தான் என தெரிவித்துள்ள அமலாக்கத்துறை, இதனை முழுமையாக விசாரிக்குமாறு கோரியுள்ளது.

"கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மாடல்"

வரலாறு நெடுக விஞ்ஞான ஊழல்களுக்கே பெயர்போன கட்சியான திமுக நடத்தும் ஸ்டாலின் மாடல் ஆட்சி என்பதே, வெறும் "கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மாடல்" தான் என்பதை நான் அடிக்கடி தெரிவித்து வருகிறேன்.

ஏற்கனவே ED அனுப்பிய ரூ. 888 கோடி #CashForJobs முறைகேட்டை இன்று வரை விசாரிக்காமல், ஊழல் அமைச்சரைக் காப்பாற்றி வருகிறது ஸ்டாலின் அரசு! தற்போது, அடுத்த ஊழலும் வெளிவந்துள்ளது.

திரு. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தால்...

* மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம்.

* ஆண்டுதோறும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்திருக்கலாம்.

* பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ. 5000/- தாராளமாக வழங்கலாம்.

* தமிழ்நாட்டிற்கு ஒரு ஆண்டிற்கான பட்ஜெட்டையே தாக்கல் செய்து விடலாம்.

காட்சிகள் மாறத் தொடங்கிவிட்டன

இவ்வளவு மக்கள் பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு, இன்னும் எத்தனை நாட்கள் தானும், தன் சகாக்களும் தப்பித்துக் கொள்வோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். காலம் மாறுகிறது. காட்சிகள் மாறத் தொடங்கி விட்டன.

விசாரணை உத்தரவிட தயாரா?

அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி.

உண்மையிலேயே திரு. ஸ்டாலினுக்கு மடியில் கனமில்லை என்றால், வழியில் பயமின்றி இந்த ஊழல்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். செய்வாரா?” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

===========================