EPS urged TVK government to abandon to construct a new Secretariat at Pattinapakkam source:thamizhalai,ai generated
தமிழ்நாடு

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இடத்தில் தலைமைச் செயலகமா? : 1,200 கோடி கடன் வாங்குவதா, TVK அரசுக்கு EPS எதிர்ப்பு!

‘மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முயற்சியை தவெக அரசு கைவிட வேண்டும்’ என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Kannan

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்

1,200 கோடி ரூபாய் செலவில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட தவெக அரசு முடிவு செய்துள்ளது. 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், 15 மாடிகளுடன் அனைத்து துறைகள், சட்டசபையை கொண்டிருக்கும் வகையில் பிரமாண்டமாக இது அமைய இருக்கிறது.

அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

புதிய தலைமைச் செயலகத்தை பட்டினப்பாக்கத்தில் அமைக்க பாமக, இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மீனவர்கள் கடும் எதிர்ப்பு

லைட் அவுஸ் முதல் கோவளம் வரை கடலோரம் வசிக்கும் மீனவ கிராம மக்களும், புதிய தலைமைச் செயலகத்தை பட்டினப்பாக்கத்தில் கட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அடுத்த வாரம் போராட்டங்களை முன்னெடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.

வாகன நெரிசல் மிக்க இடம் பட்டினப்பாக்கம்

இந்தநிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டினப்பாக்கம்...

கடற்கரையை ஒட்டிய சாந்தோம் சாலையில், காலம் காலமாக வசித்து வரும் மீனவர்கள், பொதுமக்களின் குடியிருப்புகள், பள்ளிகள், வாகன போக்குவரத்து நெரிசல் என்று மிகவும் நெருக்கடியான பகுதியாகும்.

நெருக்கடி இல்லாத இடம் முக்கியம்

இடநெருக்கடி, வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சியில் இருந்த காலங்களில் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

ரூ.1,200 கோடி கடன் வாங்கணுமா?

விவசாயிகள் பிரச்சினை, பொதுமக்களின் சமூக நலப் பிரச்சினைகள் இருக்கும் இத்தருணத்தில், கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், கடன் வாங்கி ரூ. 1,200 கோடி செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது.

நிதி நெருக்கடி சரியானதும் கட்டலாம்

புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூறவில்லை. தமிழகத்தின் நிதிநிலை சீரான பின்பு, போக்குவரத்து நெரிசலற்ற, மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கலாம்.

தவெக அரசுக்கு கோரிக்கை

தற்போதைய நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தேவையற்றது. எனவே, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தவெக அரசின் முதல்வர் விஜய்யை வலியுறுத்துகிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

================