Fever Cases Rise in Tamil Nadu: Health Dept Advises Face Masks in Hospitals
மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்
தமிழகத்தில் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காகவும் நோயாளிகளைப் பார்க்கவும் வருபவர்கள் அனைவரும் அவசியம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனப் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பல்வேறு வைரஸ் நோய்களின் தாக்கம்
தற்போது நிலவி வரும் காலநிலை மாற்றத்தால் இன்ஃப்ளூயன்ஸா ஏ, அடினோ வைரஸ், ஆர்.எஸ்.வி., கரோனா, சின்னம்மை, கூகைக்கட்டு அம்மை, மீசில்ஸ் போன்ற சுவாசப்பாதை வழியே பரவும் நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் உண்ணிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளும் அதிக அளவில் காணப்படுகின்றன.
காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள்
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 101 ஃபாரன்ஹீட்டுக்கு மேல் காய்ச்சல், கடுமையான உடல் சோர்வு, தசைவலி, தொண்டைவலி, வறட்டு இருமல், சளியுடன் இருமல், தும்மல் மற்றும் மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
இதனால் சிகிச்சைகளுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சுவாசத் தொற்று பரவும் அபாயம்
தமிழகத்தில் டெங்குவை விட சுவாசத் தொற்று நோய்களே அதிக அளவில் பரவி வருகின்றன. இத்தகைய பாதிப்புகள் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதாகப் பரவக்கூடியவை என்பதால், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனப் பொது சுகாதாரத் துறை கூறியுள்ளது.
அலட்சியம் வேண்டாம் என எச்சரிக்கை
முகக்கவசம் அணிவது சட்டப்பூர்வமாகக் கட்டாயம் இல்லை என்றாலும், பெரும்பான்மையான நோய்த்தொற்று பரவல் மருத்துவமனைகள் வாயிலாகவே நிகழ்கிறது. எனவே, அலட்சியம் காட்டாமல் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: வாக்காளர் பட்டியல் திருத்தம்: தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடா? தேர்தல் ஆணையம் விளக்கம்!
======