few days of rain, the roads in Chennai have become potholed 
தமிழ்நாடு

சிறுமழைக்கே குண்டுகுழியான சென்னை சாலைகள்: காணாமல்போன ’Smart city’

வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்ட நிலையில், சில நாட்கள் பெய்த மழைக்கே சென்னை பெருநகர சாலைகள் குண்டும் குழியுமாக மாறி விட்டன.

Kannan

தீவிரடையும் பருவமழை

தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் போதே வட மாவட்டங்கள் அதிக அளவு மழையை பெற்று விட்டன. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்கிய போதே, அணைகள், ஏரிகள், குளங்கள் முழு கொள்ளளவை எட்டி இருக்கின்றன. ஆறுகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டு இருக்கிறது. தலைநகர் சென்னை உட்பட வட மாவட்டங்களில் பருவமழை தனது பிடியை வலுப்படுத்தி இருக்கிறது.

சிலமணி நேர மழை, பல்லிளிக்கும் சாலைகள்

மோந்தா புயல் ஆந்திராவை நோக்கி சென்றாலும், சென்னையில் சில மணிநேரம் பெய்யும் மழைக்கே சாலை உள்கட்டமைப்புகள் சீட்டுக் கட்டுகளைப் போல சரிந்து காணப்படுகின்றன. மழை தொடங்குவதற்கு முன்பு பளபளவென பளிச்சிட்ட சாலைகள், இப்போது பல்லிளித்து, வாகன ஓட்டிகளை பதம் பார்க்கின்றன. முக்கிய சாலைகள் சேறு, குண்டு குழிகளாக மாறிவிட்டன. அப்படி என்றால் இணைப்பு சாலைகளை பற்றி கேட்கவே வேண்டாம்.

நரகமாகும் சென்னை பெருநகரம்

இந்தநிலை, இந்த ஆண்டு மட்டும் நடக்கிறதா? என்றால் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் இதே ககைதான். மழைக்காலம் தொடங்கி விட்டாலே நகர வாழ்க்கை நரகமாக மாறி விடுகிறது. நான்கரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக, பருவமழைக்குத் தயாராக இருப்பதாக உறுதியளிக்கிறது. ஆனால் உண்மை சாலைகளிலும், அவற்றில் எஞ்சியிருப்பதை பார்த்தால் தான் தெரிகிறது.

நோயாளிகளாய் மாறிவிட்ட சாலைகள்

சிலநாள் மழைக்கே, சென்னை சாலைகள் அதாவது ஐடி வழித்தடங்கள், பள்ளி வழித்தடங்கள், ஆம்புலன்ஸ் பாதைகள், மேம்பாலங்கள் மற்றும் வெளிப்புற சுற்றுச் சாலைகள் பயன்படுத்த முடியாத நிலையை எட்டி விட்டன. இதை மூடி மறைக்க பேட்ச் ஒர்க் என்ற பெயரில் பழுதுபார்க்கும் பணியும் நடைபெறுகிறது. இதுவும் சில நாட்களுக்கு தான். மருத்துவமனைகளுக்கு செல்லும் சாலைகளும் நோயாளிகளாக மாறி கிடக்கின்றன. பேருந்து வழித்தடங்கள் நீச்சல் குளங்கள் போல இருக்கின்றன. வட சென்னை பகுதிகளில் மக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து செல்வது இப்போது அன்றாட நிகழ்வாகி விட்டது.

மரண பயத்தில் வாகன ஓட்டிகள்

சென்னையின் புகழ்பெற்ற ஐடி வழித்தடமான ஓஎம்ஆரில், 3 கிலோமீட்டர் தூரத்திற்கு 70க்கும் மேற்பட்ட பள்ளங்கள் இருப்பதாக பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். தாம்பரம் முதல் பல்லாவரம் வரையிலான முக்கிய புறநகர்ப் பகுதியில், சாலை அரிப்பு காரணமாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரு சக்கர வாகன விபத்துகள் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

காணாமல் போன ஸ்மார்ட் சிட்டி

அம்பத்தூர் மற்றும் மாதவரத்தில், சாலைகள் பள்ளமாகி, பேருந்து சேவைகள் மற்றும் குப்பை சேகரிக்கும் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன. "ஸ்மார்ட் சிட்டி மேம்படுத்தல்கள்" என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட கோடம்பாக்கம், வடபழனி மற்றும் தியாகராய நகர் பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் சூழ்ந்து இருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி, புயல் நீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்காக செலவிடப்பட்ட பல கோடி ரூபாய் என்ன ஆனது என்பதை திமுக அரசு தான் தெரிவிக்க வேண்டும்.

மழைநீர் வடிகால் அமைப்பு எங்கே?

நகரத்தின் மழைநீர் வடிகால் வலையமைப்பில் 90% முழுமையாக செயல்படுவதாக திமுக அரசு பெருமையோடு கூறுகிறது. ஆனால், 30 நிமிடங்கள் பெய்யும் மழையே போது இது பொய் என்பதை நிரூபிக்க. பேசுகிறது. ஆனால் ஒவ்வொரு 30 நிமிட மழையும் இது ஒரு பொய் என்பதை நிரூபிக்கிறது. மணிக்கணக்கில் தண்ணீர் தேங்கி, சாலைகள் குளங்களாகி, தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் எட்டிப் பார்க்கிறது.

அலட்சியம் காட்டும் அரசு

உண்மையில் அரசு செய்து இருக்க வேண்டியது என்னவென்றால், மழைநீர் வடிகால்களை சரி செய்து இருந்தால், ஒவ்வொரு சாலையும் தண்ணீரில் மூழ்கும் அவசியமே இருக்காது. புதிதாக போடப்படும் சாலைகள் ஏன் குண்டும் குழியுமாக மாறுகின்றன. சில மணிநேர கனமழை பெய்தால் போதும், நகர சாலைகள் மீண்டும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகின்றன. மோசமான கட்டுமானம், தரக் கட்டுப்பாடு இல்லாமை, ஒப்பந்தங்களில் பெரும் ஊழல் போன்றவை இதற்கு முக்கிய காரணம்.

மரணப் பொறிகளாய் சாலைகள்

⁠மழைநீர் வடிகால்கள் 90% நிறைவு பெற்று இருந்தால், சாலைகளில் வெள்ள நீர் தேங்க வேண்டிய அவசியமே ஏற்படாது. ⁠நீண்ட கால நீடித்த தீர்வுகளை நோக்கி அரசு செல்லாமல், ரிப்பன் வெட்டுவது, மழைக்குத் தயாராக இருக்கும் புகைப்படங்களை எடுப்பது போன்றவற்றில் காண்பிக்கப்படும் அக்கறையே இந்த அவலங்களுக்கு காரணம். சென்னை சாலைகளில் பயணிக்கும் ஒவ்வொருவரும் மரண பொறிகளை எதிர்கொண்டே சென்று வருகின்றனர்.

அரசு நிர்வாகத்தின் பேரழிவு

இது இயற்கை பேரழிவு அல்ல. நிர்வாகத்தின் அப்பட்டமான தோல்வி. பருவமழைக்குத் தயாராக இருப்பதாகக் கூறும் ஒரு நகரத்தில், அதே காட்சிகள் மீண்டும் மீண்டும் மீண்டும் அரங்கேறுவதை இயற்கையின் மீது பழியாக போட முடியாது. அரசு, அதனோடு தொடர்புடைவர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்று தான் கூறவேண்டும். ஒவ்வொரு குழியும் தவற்றின் சின்னம். ஒவ்வொரு உடைந்த சாலையும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளின் சாட்சி. ஆண்டு தோறும் மழை, வெள்ளம் ஏற்படும்போது மக்கள் அவதிக்கு ஆளாவது என்பது அரசின் அலட்சியமான, அப்பட்டமான தவறு. தினமும் பயணிக்கும், பயன்படுத்தும் சாலைகளை கூட சரியாக பராமரிக்க முடியாத அரசு, தன்னை மக்கள் நலன்காக்கும் அரசு என்று அழைத்துக் கொள்வதில் எந்த உரிமையும் இல்லை என்பது தான் நிதர்சனம்.

======