filing of nominations in Tamil Nadu ending today, the final list of candidates will be released on the 9th google
தமிழ்நாடு

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு : நாளை பரிசீலனை, 9ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், 9ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.

Kannan

தமிழகத்தில் 23ம் தேதி வாக்குப்பதிவு

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 15ம் தேதி வெளியானது. அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.

5.69 கோடி வாக்காளர்கள்

ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 5.69 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் மார்ச் 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

தலைவர்கள் மனுத்தாக்கல்

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை வரை மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

வேட்புமனுக்கள் தாக்கல்

நான்கு நாட்கள் பொது விடுமுறையை தவிர்த்து நான்கு தினங்கள் மட்டுமே மனுத்தாக்கல் செய்ய முடியும். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 84 மனுக்கள், பர்கூர் தொகுதியில் 29 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறைந்தபட்சமாக மானாமதுரை, நிலக்கோட்டையில் தலா 5 மனுக்களும், காட்டுமன்னார்கோவில், திருவாரூர், பேராவூரணி, கந்தர்வகோட்டை ஆகிய தொகுதிகளில் தலா 6 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு

234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

தமிழகம் முழுவதும் அதிமுக, பாஜக வேட்பாளர்கள், கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட மதுரை மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்கின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, எடப்பாடி தொகுதியிலும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, தருமபுரி தொகுதியிலும் மனு தாக்கல் செய்கின்றனர். இன்று மாலை 3 மணி வரை மனுக்கள் பெறப்படும்.

மனுக்கள் மீது நாளை பரிசீலனை

வேட்பு மனுக்கள் மீது நாளை பரிசீலனை நடைபெறும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்புமனுக்களை பரிசீலனை செய்வார்கள். ஏற்கப்பட்ட, தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் விவரம் நாளை மாலை வெளியாகும்.

திரும்பப்பெற 9ம் தேதி வரை அவகாசம்

வேட்புமனுக்களை திரும்பப்பெற ஏப்.9-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர், சின்னங்களைப் பொருத்தும் பணிகள் ஏப்ரல்10ம் தேதி முதல் தொடங்க உள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணிகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரசாரம் செய்ய ஏப்.21 கடைசிநாள்

தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 21ம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

அது முதல் தேர்தல் நாளான ஏப்.23 மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடியும் வரையிலான 48 மணி நேரம் அமைதி காலமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த கால கட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவும், தொலைக்காட்சிகளை வைத்து காட்சிப்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

75,000 வாக்குச்சாவடிகள்

வாக்குப்பதிவுக்காக 75,032 வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் நாளில் பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட அனைத்து விதமானதொழிலாளர்கள், பணியாளர்களுக்கும் அன்று ஊதியத்துடன் விடுப்பு அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

===================