தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே ரயிலில் அடிபட்டு புலி ஒன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வரலாற்றிலேயே ரயில் மோதி புலி உயிரிழப்பது இதுவே முதல்முறை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில், புதன்கிழமை அதிகாலை செங்கோட்டை அருகே சென்றுகொண்டிருந்தது.
அப்போது பகவதிபுரம் - ஆரியங்காவு இடையிலான பூலாங்குடியிருப்பு பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற புலி மீது ரயில் மோதியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
தொடர்ந்து புலியின் உடலை ஆய்வு செய்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி உடற்கூறாய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் வனத்துறை கால்நடை மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
உடற்கூறாய்வு முடிந்த பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் புலியின் உடல் சம்பவ இடத்திலேயே எரியூட்டப்பட்டது.
இதுகுறித்து பேசிய மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன், தமிழகத்தில் ரயில் மோதி புலி உயிரிழந்தது இதுவே முதல்முறை என்று தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த இடம் கேரள மாநில எல்லையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், புலி கேரள வனப்பகுதியில் இருந்து வந்ததா என்பதை அறிய அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்ய வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, செங்கோட்டை To ஆரியங்காவு மலைப்பாதையில் இரவு நேரங்களில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை குறைக்க வேண்டும் என்று வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயில்களின் வேகத்தை இரவு நேரங்களில் 30 கி.மீ. ஆகக் குறைக்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு மாவட்ட வன அலுவலர் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், அந்த பகுதியில் இரவு நேர வனத்துறை ரோந்துப் பணிகளையும் தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
=====================