For the 2026 Assembly elections, Hari Nadar has filed his nomination papers while remaining in prison.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுத்தாக்கல் தொடங்கி, இழுபறி நீடித்து வந்த பாஜக, காங்கிரசும் கூட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு விட்டனர்.
'நடமாடும் நகைக்கடை'
இப்படி தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், 'நடமாடும் நகைக்கடை' என்று அழைக்கப்படும் ஹரி நாடார் தற்போது அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் .
சிறையில் இருந்தபடி வேட்புமனு தாக்கல்
வழக்கமாக கிலோ கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு வலம் வரும் இவர், இந்த முறை சிறையில் இருந்தபடியே தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
மீண்டும் ஆலங்குளம் களத்தில் ஹரி நாடார்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட, தற்போது புழல் சிறையில் இருக்கும் ஹரி நாடார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இது அவருக்கு மூன்றாவது தேர்தல் களமாகும்.
முந்தைய தேர்தலில் போட்டியும், பெற்ற வாக்குகளும்
இதற்கு முன்பு 2019 நாங்குநேரி இடைத்தேர்தல் மற்றும் 2021 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாங்குநேரி இடைத்தேர்தலில் 4243 வாக்குகலையும், 2021 பொதுத்தேர்தலில் 37,727 வாக்குகளையும் இவர் பெற்றிருந்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தல்
தற்போது நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை புழல் சிறைக் கண்காணிப்பாளர் முன்னிலையில் தாக்கல் செய்தார். ஹரி நாடார் புழல் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து விவரங்கள்: மலைக்க வைக்கும் தங்கம்!
ஹரி நாடார் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் பலரையும் திகைக்க வைத்துள்ளது.
அவரிடம் 11.650 கிலோ தங்க நகைகளும், சுமார் 17.06 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளும் உள்ளன. மேலும் 26.76 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும்,
12 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் ஆறு நான்கு சக்கர வாகனங்கள் இவரிடம் உள்ளன.
1.52 கோடி ரூபாய் வருமான வரி
மேலும் மனுத்தாக்கலில் கடந்த 2020-21 நிதியாண்டில் மட்டும் 1.52 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ள தகவல்களையும் இணைத்துள்ளார்.
வழக்குகளும் பின்னணியும்
பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள ஹரி நாடார் மீது 9 மோசடி வழக்குகள் உட்பட மொத்தம் 24 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த தேர்தலில் ராக்கெட் ராஜாவின் ஆதரவுடன் ஹெலிகாப்டர் பிரசாரம் செய்து அதிரடி காட்டிய ஹரி நாடார், இந்தத் தேர்தலில் அதே ஆலங்குளம் தொகுதியில் ராக்கெட் ராஜாவை எதிர்த்தே களம் காண்கிறார்.