அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன்
Sengottaiyan Join TVK Latest News in Tamil : எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக செயல்பட்டு வந்தவர் செங்கோட்டையன். கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இருந்து தொடர்ந்து எம்எல்ஏவான அவர், ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியில் அமைச்சராக பொறுப்பு வகித்தவர். ஜெயலலிதாவின் பிரசார பயண திட்டங்களை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர்.
அதிமுகவில் இருந்து நீக்கம்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து, தலைமைக்கு காலக்கெடு விதித்தார், செங்கோட்டையன். இதையடுத்து அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், தினகரன், சசிகலா ஆகியோருடன் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
செங்கோட்டையனின் அடுத்த நகர்வு என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் திமுகவில் சேருவார், தவெகவில் இணைவார் என்ற யூகங்கள் நிலவின. இந்தநிலையில், தனது எம்எல்ஏ பதவியை செங்கோட்டையன் நேற்று ராஜினாமா செய்தார். அப்போது, அமைச்சர் சேகர்பாபுவை அவர் சந்தித்து பேசியது பரபரப்பை அதிகரிக்க செய்தது.
விஜயுடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று மாலை செங்கோட்டையன் பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு சென்றார். இதன் மூலம் அவர் தவெகவில் இணைவது உறுதியாகி விட்டது. விஜய்யை நேரில் சந்தித்து செங்கோட்டையன் பேச்சு நடத்தினார்
தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்
அதைத்தொடர்ந்து, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் வருகை தந்தார்.
அவரை தவெக கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் தவெகதலைவர் விஜயை சந்தித்த செங்கோட்டையன், தவெக கட்சியில் முறைப்படி இணைந்தார்.
தவெகவில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள்
செங்கோட்டையனுக்கு தவெக துண்டை அணிவித்த விஜய், உறுப்பினர் அட்டையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். செங்கோட்டையனுடன், அவரது ஆதரவாளர்களும் விஜய் கட்சியில் இணைந்தனர். அனைவருக்கும் தவெக துண்டை அணிவித்து, உறுப்பினர் அட்டையை விஜய் வழங்கினார்.
====