எடப்பாடி பழனிசாமி கருத்தை கேட்டால் அரசை பாராட்டுவோம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி முகாம் இன்று (அக்.26) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளருக்கு சந்தித்த அவர், ''மழையால் டெல்டா மாவட்டம் மட்டுமல்ல, எங்கெல்லாம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்களோ அங்கெல்லாம் அரசு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி கூறும் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு அதை செய்தால் இந்த அரசை நாங்கள் பாராட்டுவோம்.
தமிழ்நாட்டின் சாபக்கேடு
அதை விட்டுவிட்டு விளக்கம் கொடுத்துக் கொண்டே இருந்தால் இந்த அரசுக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்'' என்றார். மேலும், பேசிய அவர், ''தீபாவளிக்கு தமிழ்நாட்டில் 750 கோடிக்கு மேல் மது விற்பனை நடைபெற்றுள்ளது, இது தமிழ்நாட்டின் சாபக்கேடு. வேர்வை சிந்தி உழைக்கின்ற மக்களின் பணமெல்லாம் டாஸ்மாக் மூலம் அரசுக்கு செல்கிறது. அதிமுக பாஜக கூட்டணி பலமாக இருக்கிறது. திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு வந்துள்ளது. இந்த வெறுப்புகள் எல்லாம் தேர்தல் நேரத்தில் திமுக மீது விழும். அது ஓட்டுகளாக அதிமுகவிற்கு மாறப்போகின்றது'' என்றார்.
சதியை கண்டறியவே சிபிஐ விசாரணை
பின்னர், கரூர் சம்பவம் குறித்து பேசிய அவர், ''விஜய் கரூர் சென்றால் மீண்டும் ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் செல்லவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் ரூபாய் பணம் செலுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களிடம் வீடியோ காலில் பேசி துக்கம் விசாரித்து விட்டார். கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நிச்சயமாக விஜய்க்கு தெரிந்து நடந்தது கிடையாது. இதில் ஏற்பட்டுள்ள சதிகளை கண்டறிய தான் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கரூரில் உயிரிழந்த 41 குடும்பங்களிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் குடும்பத்தை நேரில் வரவழைத்துள்ளார்.
=====