Former Minister Vaigai Selvan has announced his resignation from all posts within the ADMK AI generated
தமிழ்நாடு

”மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு” : அதிமுகவில் இருந்து விலகினார் வைகைச் செல்வன்! : ”நல்ல தலைவர் யார்?” விளக்கம்..

அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக, முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அறிவித்துள்ளார்.

Kannan

வைகைச் செல்வன்

அரசியல்வாதி, எழுத்தாளர், கவிஞர் என பன்முகத்தன்மை கொண்டவர் வைகைச் செல்வன். முனைவர் பட்டம் பெற்ற இவர் அதிமுகவில் இளைஞர் - இளம்பெண்கள் பாசறையின் மாநிலச் செயலாளர், இலக்கிய அணிச் செயலாளர் பொறுப்புகளை வகித்தவர்.

அமைச்சராக இருந்தவர்

2011 தேர்தலில், அருப்புக்கோட்டை எம்எல்வேவாக தேர்வு செய்யப்பட்ட வைகைச் செல்வன், தமிழக அரசின் தலைமைக் கொறடா, பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

அதிமுகவில் இருந்து விலகினார்

அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வரும் நிலையில், வைகைச் செல்வனும் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன்

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதி உள்ள கடிதத்தில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன்.

நல்ல தலைவர் யார்?

ஒரு தலைவர் தானே அழிந்தால் கூட தனது கொள்கைகளும், இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், இயக்கமும், கழகத் தொண்டர்களும் அழிந்தால் கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருப்பதில்லை.

திமுகவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதா?

திமுகவோடு இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதன் மூலம், திமுக எதிர்ப்பு நிலையில் இருந்து அதிமுக சமரச போக்கில் போனதால் தனது அடையாளத்தை இழந்து விட்டது.

சரியான நேரத்தில் தவறான முடிவு

சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பதன் காரணமாகவும், தனது வெற்றிப் பாதையில் இருந்து அதிமுக விலகிச் சென்று விட்டது.

மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு

தேர்தல் களத்தில் நான் தனித்து விடப்பட்ட நிலையிலும் கூட, கழகத்திற்காக தேர்தல் பரப்புரையாற்றினேன். ஆனால், மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று

மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர் வாழ்வதைவிட, அவ்வாறு செய்யாததால் கெட்டான் என்று சொல்லப்படுதல் நன்று என்கிற வள்ளுவப் பேராசானின் வார்த்தைகளுக்கு நான் கீழ் படிகிறேன்.

விலகுவது கடுமையான வலி

மாணவப் பருவம் தொட்டு ரத்தமும், சதையுமாக இருந்து இந்த இயக்கத்தோடு பணியாற்றி தற்போது விலக வேண்டிய சூழ்நிலையை எண்ணிப் பார்க்கையில், என் மனதில் ஏற்படும் கடுமையான வலியை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை.

நேரம் வரும் போது பேசுகிறேன்

‘புதிய இடத்தில் நடுவதற்கு புடுங்கிப் போன செடியில் இருக்கும் பழைய மண்ணைப் போல’ இந்த இயக்கத்திற்காக ஆற்றிய என் பழைய நினைவுகளை என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை” என்று வைகைச் செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

தவெகவில் அதிமுகவினர்

ஏற்னவே தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா்.

தொடா்ந்து, முன்னாள் அமைச்சா்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூா் ராஜூ, எம்.சி.சம்பத் ஆகிய மூவரும் தவெகவில் இணைந்தனா்.

இந்த நிலையில், சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன், எஸ். வளா்மதி ஆகியோர் தவெக பொதுச் செயலரும், அமைச்சருமான என். ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.

அவர்களது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் அதிமுகவில் இருந்து விலகி தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டனர்.

வைகைச் செல்வனும் விலகல்

தற்போது முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

=====