Kaliammal Join ADMK : சீமானின் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். இவர் கடந்த 2025 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகல்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடு மற்றும் கட்சியின் போக்கு மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அக்கட்சியிலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.
திமுக அல்லது தவெக
இந்நிலையில் காளியம்மாள் திமுக அல்லது விஜய்யின் தவெக கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
யார் இந்த காளியம்மாள்
காளியம்மாள் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர். மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி பெண்மணி ஆவார். சமூக வலைதளங்களில் தனது பேச்சாற்றல் மூலம் பிரபலமானவர் என்றே சொல்லலாம்.
மக்களவைத் தேர்தல் வேட்பாளர்
இவர் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகவும், பேச்சாளராகவும் இருந்து வந்தார்.
2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சென்னை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு 60,000 வாக்குகளையும் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு 1,20,000 வாக்குகளையும் பெற்று கவனம் ஈர்த்தார்.
காளியம்மாள், சீமான் மோதல்போக்கு
தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிற்கும், காளியம்மாவிற்கும் மோதல் போக்கு நிலவியதாக தகவல்கள் வெளியாகின.
கட்சியில் தனிநபர் அதிகாரம், ஜனநாயகம் இல்லை
இதைத்தொடர்ந்து அக்கட்சியில் ஜனநாயகம் இல்லை என்றும், தனிநபர் அதிகாரம் தான் அந்த கட்சியில் அதிகமாக உள்ளதாகவும் கூறி பிப்ரவரி 2025 ஆம் ஆண்டில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதிமுகவில் காளியம்மாள்
இப்போது தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருவாயில் காளியம்மாள், அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
ஏற்கெனவே காளியம்மாள் மாநில ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி உள்ளதால், தற்போது அதிமுகவில் அவருக்கு கொள்கை பரப்பு இணை செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதிமுகவிற்கு கூடுதல் பலம்
காளியம்மாள் மிகச்சிறந்த பேச்சாளர் என்பதால் அதிமுகவிற்கு கூடுதல் பலம் சேர்ந்துள்ளது எனலாம்.
மேலும் அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மயிலாடுதுறை சட்டசபை தொகுதியின் வேட்பாளராக களமிறங்கவும் வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
காளியம்மாள் பேட்டி
அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட காளியம்மாள் அதன்பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை தான் முடிவு செய்யும் என்று கூறியுள்ளார்.
மேலும் அதிமுகவின் மாவட்ட பொறுப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு இருந்துள்ளதாகவும், அதனால் கட்சி தலைமை முடிவு செய்து பொறுப்பு வழங்கும் என்று கூறியுள்ளார்.