பிளவுபட்டு கிடக்கும் பாமக
GK Mani Removed From PMK by Anbumani Ramadoss : பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி, கட்சி இரண்டாக பிரிந்து நிற்கிறது. கௌரவ தலைவர் ஜி.கே. மணி ராமதாஸ் பக்கம் நிற்கிறார். தலைவர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட ஜி.கே. மணி, கௌரவ தலைவராக உள்ளார்.
ஜி.கே. மணி நீக்கம் - அன்புமணி
அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜி.கே. மணி தான் காரணம் என்று குற்றம்சாட்டி வரும் அன்புமணி, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார். சேலத்தில் 19ம் தேதி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் பாமக பொதுக்குழுவிற்கும் அனுமதி வழங்க கூடாது என்று அன்புமணி தரப்பு புகார் அளித்து இருக்கிறது.
1980 முதல் பாமகவில் இருக்கிறேன்
அன்புமணியின் நடவடிக்கை பற்றி, சேலத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜி.கே.மணி, ”1980ஆம் ஆண்டு இந்த இயக்கத்தை தொடங்கியவர் ராமதாஸ். அன்றிலிருந்து இன்று வரை அவருடன் இருக்கிறேன்.
பாமகவின் அடையாளம் ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சி என்றாலே நாடு முழுவதும் இருப்பவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்கள் கூறும் ஒரே விஷயம் ராமதாஸ் தான் அடையாளம். அவருடன் 46வது ஆண்டாக பயணிக்கிறேன். 25 ஆண்டுகள் கட்சி தலைவராக இருந்துள்ளேன் என்று ஜி.கே. மணி தெரிவித்தார்.
சிரிப்பதா?, நகைப்பதா?
இத்தகைய சூழலில் என்னை நீக்கியதாக செய்தி வருகிறது என்றால் சிரிப்பதா, நகைப்பதா, அநாகரிகமா? என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மனிதநேயமுள்ள, மனிதப் பண்புள்ள நபர்களுக்கு இப்படிப்பட்ட சிந்தனை வருமா? என்று ஜி.கே. மணி கேள்வி எழுப்பினார்.
அன்புமணியை ராமதாஸ் நீக்கிவிட்டார்
அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கிவிட்டேன் என்று ராமதாஸ் கூறிவிட்டார். இதை அறிக்கையாகவும் வெளியிட்டிருக்கிறார். எனவே அன்புமணி பாமகவில் பொறுப்பில் இல்லை என்று குறிப்பிட்டார் ஜி.கே. மணி.
ராமதாஸ் ஒருவருக்கே அதிகாரம்
அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது அன்புமணி. எனவே அடிப்படை உறுப்பினர் இல்லாத ஒருவர், எப்படி என்னை கட்சியில் இருந்து நீக்க முடியும்? என்று ஜி.கே. மணி கேள்வி எழுப்பினார்.
அன்புமணியால் நீக்க முடியாது
அருளை எப்படி நீக்க முடியும்? மற்றவர்களை நீக்க முடியும்? யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. யாராக இருந்தாலும் கட்சியில் சேர்க்கவும், நீக்கவும், பொறுப்பு வழங்கவும் அதிகாரம் படைத்தவராக ராமதாஸ் தான் என்று திட்டவட்டமாக தெரிவித்தார் ஜி.கே. மணி.
விரக்தியில் பாமகவினர்
ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பு நாளுக்கு நாள் எடுத்து வரும் நடவடிக்கைகள், பாமக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் விரக்தியில் ஆழ்த்தி வருகின்றன.
==========================