ஒரு லட்சத்தை தாண்டிய தங்கம்
Gold and Silver Rate Today in Chennai : சர்வதேச முதலீட்டாளர்களும், உலகின் பல்வேறு நாடுகளும், தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்வதால் அவற்றின் விலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 15ம் தேதி ஆபரண தங்கத்தின் விலை முதல் முறையாக ரூ.1 லட்சத்தை தாண்டியது. அன்றைய தினம் தங்கத்தின் விலை சவரன் ஒரு லட்சத்து 120 ரூபாய் ஆக விற்பனை ஆனது.
ஏற்ற இறக்கத்தில் தங்கம்
மறுநாள் தங்கத்தின் விலை சற்று குறைந்தது. தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த தங்கத்தின் விலை நேற்று முன்தினம் கிராம் 12,400 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, 99,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இரண்டு முறை உயர்ந்த தங்கம்
இந்நிலையில் இன்று (டிசம்பர் 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,840க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480க்கு விற்பனை ஆனது.
சாமான்ய மக்கள் அதிர்ச்சி
இன்று மதியம் தங்கத்தின் விலை மீண்டும் 720 ரூபாய் அதிகரித்தது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ஒரு லட்சத்து ஐநூற்று 60 ரூபாயாக விற்பனை ஆனது. இது இதுவரை இல்லாத உச்சமாகும். தங்கத்தின் விலை சாமானிய மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரேநாளில் சவரனுக்கு 1,340 ரூபாய் அதிகரித்து இருக்கிறது தங்கம் விலை.
18 காரட் தங்கம் விலை
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.83,920க்கும், ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,490க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய உச்சத்தில் வெள்ளி
வெள்ளி விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.231-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
=====