Government employees unions, which plans to strike, DMK government failed to fulfill its demands 
தமிழ்நாடு

"எதிர்பார்த்தோம், ஏமாந்தோம்" இனி போராட்டம் தான் : அரசு ஊழியர்கள்

திமுக அரசு நான்கரை ஆண்டுகள் கடந்தும் கோரிக்கைகளை நிறைவேற்றாததால், போராட்டத்தில் குதிக்க அரசு ஊழியர்கள் சங்கங்கள் முடிவு எடுத்துள்ளன.

Kannan

திமுகவின் வாக்குறுதிகள்

Government employee plans to strike, DMK government failed to fulfill its demands : திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ஆணித்தரமாக தெரிவித்தது. தேர்தல் அறிக்கையிலும் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

காற்றில் பறந்த வாக்குறுதிகள்

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஓடிவிட்டது. ஆனால், கொடுத்த வாக்குறுதிகள் அப்படியே இருக்கின்றன. இன்னும் 6 மாத காலத்தில் சட்டமன்ற தேர்தலும் வரவிருக்கிறது. ஆனால் வாக்குறுதிகள் மட்டும் அப்படியே நிற்கிறது. கேட்டுப் கேட்டுப் பார்த்து அனைவரும் சலிப்படைந்து விட்டனர்.

காலிப் பணியிடங்கள்! எங்கே ஊழியர்கள்?

இந்தநிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் ரமேஷ், பொதுச்செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் ஆகியோர், ”தி.மு.க., ஆட்சிப்பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகளாகியும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. அரசு துறைகளில் 4 லட்சம் காலி பணியிடங்களுக்கு மேல் உள்ளன. இதனால் பணிப்பளுவுடன் ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள்

கடந்த ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வை பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள்கூட அறிவித்தும் தமிழகத்தில் அறிவிக்கவில்லை.

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம், 1.7.25 முதல் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வை நிலுவையுடன் வழங்க வலியுறுத்தி, டிசம்பர் 4 மற்றும் 5 ல் சென்னையில் உண்ணாவிரதம்.

தொடர் போராட்டங்கள்! பலனளிக்குமா?

2026 ஜனவரி 18 முதல் ஜனவரி 30 வரை பிரசார இயக்கம், ஜனவரி 31ல் சென்னையில் ஆயத்த மாநாடு, அதே ஜனவரியில் சென்னையில் கோரிக்கை பேரணி, பிப்ரவரி 10 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில்,

” திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்து அரசு ஊழியர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றனர். ஆனால் எதிர்பார்த்தது போலின்றி முற்றிலும் முரண்பாடான செயல்பாடுகளை சந்தித்து வருகிறோம்.

காலவரையற்ற வேலைநிறுத்தம்

கடந்த ஆட்சி கோரிக்கைகளை பேசவில்லை என்றால் இப்போது அழைத்துப் பேசி பலனில்லை. அரசு ஊழியர் குடும்பங்களை கருத்தில் கொள்ளாமல் கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 5 சதவீதமாக குறைத்துள்ளது. எனவே,சமரசமற்ற போராட்டத்தை கையில் எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதற்காக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து, 2026ல் ஜனவரி முதல் வாரம் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த உள்ளோம்” என்றனர்.

=====