Governor explained to Vijay that he was not invited to form government because he did not havea majority google
தமிழ்நாடு

”ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை” : விஜயிடம் ஆளுநர் விளக்கம் : அடுத்து என்ன?, உச்ச நீதிமன்றத்தை நாடுமா தவெக!

பெரும்பான்மை இல்லை என்பதால், தவெக ஆட்சி அமைக்க அழைக்கவில்லை என்று, விஜயிடம் ஆளுநர் விளக்கி இருக்கிறார்.

Kannan

தனிப்பெரும் கட்சி தவெக

தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இன்னும் 11 இடங்கள் தேவைப்படுகிறது.

தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு

திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் தனது 5 எம்எல்ஏக்கள் ஆதரவை தவெகவிற்கு வழங்கி இருக்கிறது. அமைச்சரவையிலும் காங்கிரஸ் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 6 இடங்கள் தேவை என்ற நிலையில், இடதுசாரிகள், விசிக ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்

தமிழக முதல்வராக பதவி ஏற்க ஆளுநர் செயலர் கிர்லோஷ் குமாரை, நேற்று சந்தித்து உரிமை கோரினார் விஜய். ஆனால், ஆட்சி அமைக்க முறைப்படி அழைக்கப்படவில்லை. இதனையடுத்து இன்று மீண்டும் ஆளுநர் அர்லேகரை விஜய் சந்தித்து பேசினார்.

இரண்டு முறை சந்திப்பு

24 மணி நேரத்தில் நடைபெற்ற இந்த 2வது சந்திப்பு தேசிய அளவில் பேசுபொருளானது. சுமார் 45 நிமிடங்கள் சந்திப்பு நடைபெற்றது.

ஆளுநர் நிலைப்பாடு விமர்சனம்

ஆளுநர் வேண்டுமேன்றே தாமதப்படுத்துவதாகவும், விஜயை கட்டுப்படுத்த பாஜக முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. திருமாவளவன், வீரபாண்டியன், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

ஆளுநர் மாளிகை விளக்கம்

இந்தநிலையில், விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் தரப்பில் இருந்து இதுவரை எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. இந்தச் சூழலில் ஆளுநர் மாளிகையில் தரப்பில், விஜயிடம் பேசியது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தவெகவிற்கு பெரும்பான்மை இல்லை

”த.வெ.க. ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெறவில்லை என ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார். த.வெ.க. தலைவர் விஜய்யை மக்கள் பவனுக்கு நேரில் அழைத்துப் பேசினேன்.

விஜயிடம் ஆளுநர் விவரிப்பு

ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு த.வெ.க.வுக்கு இல்லை. போதிய பெரும்பான்மைக்கான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை என்பதை விஜய்யிடம் ஆளுநர் விளக்கியதாக” அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை நாடுமா தவெக

முன்னதாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கும் விஜய், உச்ச நீதிமன்றத்தை நாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அப்படி நடந்தால், கர்நாடகத்தில் எஸ்ஆர் பொம்மை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை போன்று, ஆட்சி அமைக்க அனுமதி வழங்கப்படாலும் என்று கூறப்படுகிறது.

=============