Guidelines issued for election campaigning and holding public meetings in Tamilnadu Government Of Tamil Nadu
தமிழ்நாடு

பொதுக்கூட்டம் நடத்த 20 லட்சம் டெபாசிட் : வழிகாட்டு நெறிமுறைகள்

Election Campaign, Public Meeting Guidelines in Tamil Nadu : தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Kannan

அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்கள்

Election Campaign, Public Meeting Guidelines in Tamil Nadu : கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய அரசியல் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனிடையே, அரசியல் கட்சிகள் பிரசார கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், ரோடு ஷோக்கள் நடத்த உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்குமாறு உத்தரவிட்டது.

அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

வரைவு வழிகாட்டு நெறிமுறைகள்

மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி,மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அங்கிகரீக்கப்பட்ட தேசிய கட்சிகளான, காங்கிரஸ், பாஜக, சிபிஎம், ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ், அங்கிகரீக்கப்பட்ட மாநில கட்சிளான, திமுக, அதிமுக, தேமுதிக, சிபிஐ, விசிக, நாம் தமிழர் மற்றும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட பாமக, மதிமுக, தவாக, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, புரட்சி பாரதம், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பங்கேற்ற கட்சிகளின் நிர்வாகிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். அவர்களின் ஆலோசனைகளை ஏற்று, வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி நிகழ்ச்சிகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன.

  1. குறைந்த ஆபத்து

  2. மிதமான ஆபத்து

  3. அதிக ஆபத்து

குறைந்த ஆபத்து என்றால் 200 பேருக்கு ஒரு காவலர். மிதமான ஆபத்து என்றால் நூறு பேருக்கு ஒரு காவலர், அதிக ஆபத்து என்றால் 50 பேருக்கு ஒரு காவலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டங்களுக்கான டெபாசிட்

பொதுக்கூட்டத்தில் 5000 பேர் முதல் 10000 பேர் கலந்து கொள்வதாக இருந்தால் 1 லட்சம் ரூபாய் டெபாசிட், 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் என்றால் 3 லட்சம் ரூபாய் பெடாசிட், 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான மக்கள் கலந்துகொள்வதாக இருந்தால் 8 லட்சம் வரை டெபாசிட், 50 ஆயிரம் பேருக்கு மேல் 20 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு 10 நாட்கள் முன்பாகவும் 15 நாட்களுக்கு மிகாமலும் மனு கொடுக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத மற்ற இடத்திற்கு 21 நாட்கள் முன்பாகவும் 30 நாட்களுக்கு மிகாமலும் மனு கொடுக்க வேண்டும்.

பொதுக்கூட்டம் நடத்த வழிமுறை :

  • நிகழ்ச்சியை குறிப்பிட்ட நேரத்திற்குள் நடத்த வேண்டும்.

  • கூட்டத்தினரின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு முறைக்கு அமைப்பாளர்கள் பொறுப்பு ஏற்பு.

  • பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு ஏற்று இழப்பீட்டை வழங்க வேண்டும்.

  • அவசரகால ஊர்திகள் இடையூறின்றி செல்வதற்கு வழியை உறுதிப்படுத்துதல்.

  • பொது மக்களுக்கு இடையூறுயின்றி வாகனங்களை உரிய இடத்தில் நிறுத்தி வைப்பதை உறுதி செய்தல்.

  • கர்ப்பிணி பெண்கள் மூத்த குடிமக்கள் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இட ஒதுக்கி அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

ரோடு ஷோ முன்மொழியப்பட்ட கருத்துக்கள்

  • ரோடு ஷோ நடத்த உள்ள வழித்தடம் உரை நிகழ்த்த உள்ள இடம் குறிப்பிடப்பட வேண்டும்.

  • துவங்கும் இடத்திற்கும் முடிவு வரும் இடத்திற்கும் சிறப்பு விருந்தினர் வருகை தரக்கூடிய நேரம்.

  • உரை நிகழ்த்தும் இடத்திலும் வழித்தடத்திலும் எதிர்பார்க்கப்படும் கூட்டம்.

  • சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை , மாநில நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்புடன் இருந்து எழுத்துப்பூர்வமான அனுமதி.

  • ரோடு ஷோ நடத்துவதற்கு கூடுதல் விதிமுறைகள்

  • சிறப்பு அழைப்பாளர் பேசும் இடத்தில் இருந்து 500 அடி தூரத்திற்கு தடுப்பு அமைப்பாளரே செய்தல் வேண்டும்.

  • அவசர சேவைகள், பொதுமக்கள் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்த வேண்டும்.

  • நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே உரை நிகழ்த்த வேண்டும், வழியில் வேறு எங்கு உரை நிகழ்த்தக்கூடாது.

  • சாலையோரம் மக்கள் ஒரே இடத்தில் நிலையாக கூடியிருந்து வாகனம் சென்றவுடன் கலைந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

  • சிறப்பு அழைப்பாளரின் வாகனத்தை பின்தொடர்ந்து மக்கள் செல்வதை தவிர்க்கும் பொருட்டு தன்னார்வலர்களை நியமித்து கூட்டத்தை ஒழுங்கு படுத்த வேண்டும்.

=================