H5N1 Bird Flu Virus Outbreak in Chennai Avian Influenza Virus Symptoms How To Identify here tips in Tamil source:google
தமிழ்நாடு

சென்னையில் "பறவைக் காய்ச்சல்" : நமக்கு என்ன பாதிப்பு!

H5N1 Bird Flu Virus Outbreak in Chennai : சென்னையில் H5N1 ஏவியன் இன்ஃப்ளூயன்சா என்ற பறவைக் காய்ச்சளுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

S Kavitha

பறவைக் காய்ச்சல் பாதிப்பு

H5N1 Bird Flu Virus Outbreak in Chennai : சென்னையில் அடையார், வேளச்சேரி, காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் திடீரேன கொத்து கொத்தாக காகங்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

காகங்கள் உயிரிழப்பு

ஏனென்றால் அதற்கு முன்னர் தான் கர்நாடகாவிலும் இதேபோன்று காகங்களின் தொடர் உயிரிழப்பு நிகழ்ந்தது. கர்நாடகாவில் மர்மமான முறையில் உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை சோதனை செய்ததில் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் தமிழக எல்லைகளில் பதற்றமும் ஏற்பட்டது.

சென்னையில் ஆய்வு

கர்நாடகாவில் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்ட நிலையில் சென்னையிலும் காகங்கள் உயிரிழந்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து காஞ்சிபுரத்தில் உள்ள கால்நடை மற்றும் நோய்த்தடுப்பு புலனாய்வுக் குழுவினர் சென்னையில் இறந்த காகங்களின் மாதிரியை போபாலில் உள்ள தேசிய நோய்க் கட்டுப்பாட்டு ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி சோதனைக்கு உட்படுத்தினர்.

அந்த ஆய்வின் முடிவு தான் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பறவை காய்ச்சல்

அந்த ஆய்வின் முடிவில் H5N1 ஏவியன் இன்ஃப்ளூயன்சா என்ற பறவைக் காய்ச்சல் இருந்தது கண்டறிப்பட்டுள்ளது. உயிரிழந்த காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் இது மனிதர்களுக்கும் பரவும் அபாயம் இருப்பதாக மத்திய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகம் தமிழக தலைமைச் செயலாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியது.

பறவை காய்ச்சல் துரித நடவடிக்கை

அந்த கடிதத்தில் பறவைக்காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் தூய்மைப் பணிகள்

இதனைத்தொடர்ந்து சென்னையில் காகங்கள் உயிரிழந்த இடங்களான அடையாறு, பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பறவைகளை தொட வேண்டாம்

சென்னையில் கிட்டத்தட்ட 1,500 காகங்கள் உயிரிழந்த நிலையில் உங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருக்கில் காகங்களோ அல்லது வேறு ஏதேனும் பறவை இனங்களோ இறந்து கிடந்தால் அவற்றை பொதுமக்கள் வெறும் கையால் தொட வேண்டாம் என்றும் உடனடியாக சுகாதாரத் துறைக்கு அறிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வனத்துறையினரும், பராமரிப்புத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பறவை காய்ச்சல் எப்படி பரவும்

பாதிக்கப்பட்ட பறவைகளின் எச்சில், மலம், மூச்சுக்குழாய் திரவங்கள் மற்றும் அசுத்தமான சூழலுடன் நேரடித் தொடர்பு கொள்வதன் மூலமாகத் தான் பறவைக் காய்ச்சல் பரவுகிறது.

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

பாதிக்கப்பட்ட கோழிகள் அல்லது பறவைகளைக் கையாளுதல் அல்லது அசுத்தமான அவற்றின் மேற்பரப்புகளைத் தொட்ட பின் கண்கள், மூக்கு, வாயைத் தொடுவதால் இந்நோய் பரவுகிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பறவை காய்ச்சல் பொதுவாக மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவாது, ஆனால் பாதிக்கப்பட்ட நபருடன் மிக நெருங்கிய தொடர்பு இருந்தால் அரிதாக பரவக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

முட்டை சாப்பிட்டால் பறவைக் காய்ச்சல் வருமா?

முட்டை இறைச்சி முதலானவற்றை பொதுமக்கள் தாராளமாக சாப்பிடலாம். ஆனால் அவற்றை சுத்தமான முறையில் சமைத்து சாப்பிட வேண்டும்.

ஏனென்றால் முறையாக சமைக்கப்படாத முட்டை மற்றும் இறைச்சியில் இருந்து பறவைக்காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எனவே கோழி இறைச்சி மற்றும் முட்டை முதலானவற்றை நன்கு வேகவைத்து சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.

முடிந்த அளவு ஆஃப் பாயில் முறையிலான அரை பதத்தில் வேகவைத்த உணவுகளை தவிர்க்க வேண்டும் அறிவுறுத்தப்படுகிறது.

=====