Has Annamalai Quit the BJP? Sensational Twist in Delhi Consultations!
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை
தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
உட்கட்சி விவகாரம் மற்றும் புகார்கள் அடங்கிய கடிதம்
ஏற்கனவே தமிழக பாஜகவின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் புகார்கள் அடங்கிய கடிதம் ஒன்றை பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினிடம் அண்ணாமலை நேரில் வழங்கியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக தற்போதைய சூழலில் கட்சியை விட்டு விலகுவதற்கான தனது முடிவை மேலிடத்திடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 2 மணி நேரப் பரபரப்பு ஆலோசனை
டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்த அண்ணாமலை, சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர ஆலோசனை நடத்தினார்.
கட்சியிலிருந்து விலகுவதற்கான முதன்மை காரணம்
இந்தச் சந்திப்பின் போது, தான் கட்சிப் பதவியைத் துறப்பதற்கான முதன்மைக் காரணங்களை அவர் பட்டியலிட்டதாக தெரிகிறது.
தகுந்த ஆதாரங்களுடன் விளக்கம்
மேலும், சமீபகாலமாக தமிழக பாஜகவுக்குள் நடந்த உட்கட்சி மோதல்கள் மற்றும் தன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்களுடன் அவர் விளக்கமளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமரசத்தை ஏற்காத அண்ணாமலை
இதனைக் கேட்ட தேசியத் தலைவர் நிதின் நபின், அண்ணாமலையை சற்றுப் பொறுமையாக இருக்குமாறும், உரிய நேரத்தில் அவருக்கான தகுந்த அங்கீகாரமும் பதவியும் தேடி வரும் என்றும் உறுதியளித்ததாகவும், ஆனால், அண்ணாமலை இந்த சமரசத்தை ஏற்க மறுத்து தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அண்ணாமலை , பி.எல். சந்தோஷ் சந்திப்பு
தேசியத் தலைவருடனான சந்திப்பைத் தொடர்ந்து, பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷையும் அண்ணாமலை நேரில் சந்தித்துப் பேசினார்.
தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அண்ணாமலைக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஏற்கனவே பி.எல். சந்தோஷிடம் முன்வைத்திருந்ததாக கூறப்பட்டு வந்தது.
பாஜகவில் இருந்து விலகல்
இந்நிலையில் அவற்றுக்கான விரிவான விளக்கங்களை அளித்த அண்ணாமலை, இறுதியாக கட்சியிலிருந்து முற்றிலும் விடுபடுவதாக கூறி பாஜகவில் இருந்து தற்போது விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை புதிய கட்சி?
கட்சியிலிருந்து அண்ணாமலை வெளியேறியுள்ளதைத் தொடர்ந்து, ஏற்கனவே அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், வரும் ஜூன் 4 ஆம் தேதி அவரது பிறந்தநாலன்று அவர் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடையே தற்போதைய சூழலில் எழுந்துள்ளது.
=====