heated debate took place in Assembly regarding lands acquired for Parandur airport project AI generated
தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலைய விவகாரம் : ”ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை - லாட்டரி மருமகன்” : தவெக - திமுக கடும் வாக்குவாதம்...

“பரந்தூர் விமான திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் என்ன செய்யப்படும்?” என சட்டசபையில் காரசார வாதம் நடைபெற்றது.

Kannan

எடப்பாடி பழனிசாமி கேள்வி

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக தவெக அரசு நேற்று அறிவித்தது. இதையடுத்து இன்று பேரவையில் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்யப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், “இந்த திட்டத்துக்கு மொத்தமாக 5846 ஏக்கர் நிலங்கள் தேவைப்பட்டது, இதில் 3774 ஏக்கர் பட்டா நிலங்கள்.

அதில் 2681 ஏக்கர் விவசாய நிலங்கள். அரசு நிலங்களாக இதில் காட்டப்பட்டது 1972 ஏக்கர் ஆகும், இதில் 1558 ஏக்கர் நீர் நிலைகள் ஆகும்.

48% நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தல்

இந்த திட்டத்துக்காக 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். ஆனால் 48% நிலங்கள் மட்டும் தான் கையகப்படுத்தப்பட்டது.

இதில் ஏகனாபுரம், காரை, தண்டளம், சிறுவலூர் போன்ற கிராமங்களில் ஒரு சென்ட் நிலம் கூட கையகப்படுத்தவில்லை.

விமான நிலைய விரிவாக்கம் - 55 மில்லியன் பயணிகள்

சென்னையில் இப்போதுள்ள விமான நிலையத்துக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் உள்ளது. இந்த விமான நிலையத்தில் கூடுதலாக திட்டமிட்டுள்ள பணிகளை முடிந்தால் வருடத்துக்கு 55 மில்லியன் பயணிகளைக் கையாள முடியும்.

பரந்தூர் - சுற்றுச்சூழல் அனுமதி இல்லை

பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி இதுவரை வாங்கவில்லை. பரந்தூர் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காகவோ, கருப்பு பணத்தை முதலீடு செய்தவர்களுக்காகவோ கதறுகிறார்கள்” என்றார்.

ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை - லாட்டரி மருமகன்

இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என நீங்கள் சொல்வீர்கள் ஆனால், எந்த லாட்டரி மருமகனுக்காக நீங்கள் புதிய விமான நிலையத்தை அமைக்கப் போகிறீர்கள் என நான் கேட்கட்டுமா.

பரந்தூர் தேர்வு எதற்காக?

சென்னையின் புவியியல் அமைப்பின்படிதான் மேற்கு பகுதியான பரந்தூரை தேர்வு செய்தோம். பரந்தூரில் குறைவான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அடிப்படையில் இதனை தேர்வு செய்தோம்.

திட்டத்தை கைவிடுவது வளர்ச்சியை பாதிக்கும்

பல இடங்களை பார்த்த பின்னர் மத்திய அரசு பரந்தூருக்கு தான் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதில் பல சிக்கல்கள் உள்ளது. பரந்தூரில் 2500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கைவிடுவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்” என்றார்.

அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி

தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்காக, வெளியூரில் வசிப்பவர்களின் நிலங்களுக்கு மட்டுமே வலுக்கட்டாயமாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை போட்டு கையகப்படுத்தினார்கள்.

நான் சொன்ன 4 கிராமங்களில் ஒரு சென்ட் நிலம் கூட கையகப்படுத்தவில்லை. இதற்காக 1000 நாட்களாக போராடிய மக்களுக்கு முதல்வர் விஜய் ஆதரவு கொடுத்தார். கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் குறித்து முதல்வரிடம் பேசி உரிய முடிவு எடுப்போம்” என்றார்.

சென்னை வெள்ளம் தடுப்பு - பரந்தூர் பகுதி

அப்போது பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “பரந்தூர் விமான நிலையம் அமைக்க இருந்த பகுதியில் கம்பன் கால்வாய் என்ற தொல்லியல் பொக்கிஷம் ஓடுகிறது.

பரந்தூர் பகுதி உறிஞ்சு நிலம், அது சென்னை வெள்ளத்தை தடுக்க கூடியது. பரந்தூரில் கிரீன் ஏர்போர்ட் கட்ட முடியாது, தண்ணீர் ஏர்போர்ட் வேண்டுமானால் கட்டலாம்” என்றார்.

பரந்தூரில் மாற்று திட்டங்கள்

இதன் பின்னர் சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேசுகையில், “பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மாற்று தொழில் திட்டங்கள் மக்களை பாதிக்காதவாறு செயல்படுத்தப்படும்.

இதன் மூலம் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி இப்பகுதியில் ஏற்படும்.

விமான நிலைய விரிவாக்கம் - திமுகவிற்கு கேள்வி

விவசாய விளைநிலங்கள் மற்றும் கால்வாய்கள் நிறைந்துள்ள பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைத்தால், சென்னையில் வெள்ளபாதிப்பு ஏற்படும்.

மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தும், என்ன நோக்கத்துக்காக 5 ஆண்டுகள் ஏன் பணிகளை கிடப்பில் போட்டிருந்தீர்கள்.

2வது விமான நிலையம் உறுதியாக வரும்

பரந்தூர் விமான நிலையத்துக்காக தான் 5 ஆண்டுகள் விமான நிலைய விரிவாக்கம் கிடப்பில் இருந்தது. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் மக்கள், விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் கையகப்படுத்தப்பட்டு அமைக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

==========