சென்னை கடற்பரப்பில் தாழ்வு மண்டலம்
Chennai Rain News Update in Tamil : இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவிக்கையில், “ வங்கக் கடலில் உருவான ’டிட்வா’ புயல் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக சென்னை கடல் பரப்பில் நிலவி வருகிறது. மேலும், இது மழைக்கான மேகக் குவியல்களை உருவாக்கி வருவதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு இதே பகுதியில் நீடிக்கும்.
சென்னையில் மழை தொடரும்
இதன் காரணமாக, சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை தீவிரமாக இருக்கும் சென்னை அருகே கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நாள் முழுவதும் நீடிக்க உள்ளதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
தமிழகத்தில் மிதமான மழை
நீலகிரி, கோவை, ஈரோடு, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நிரம்பி வழியும் ஏரிகள்
ஏற்கனவே, பெய்த மழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி விட்ட நிலையில், தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், ஏரிகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
சாலைகளில் மழைநீர், வெள்ளம்
ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுப்பதால், மழை நீர் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். முன்னெச்சரிக்கையாக தனியார் பள்ளிகள் இன்று அரைநாள் விடுமுறை விட்டுள்ளன. மழை நிலவரம், நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சென்னைக்கு ஆரஞ்சு அலெர்ட்
இதனிடையே சென்னை அருகே நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலத்தின் வேகம் மணிக்கு 3 கி.மீ. ஆக குறைந்துள்ளது. எனவே, சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
================