தமிழகத்தில் தவெக ஆட்சி
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதியில் வெற்றிப்பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்.
அதிமுகவில் இருந்து 6 பேர் விலகல்
இதனையடுத்து அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் அந்த கட்சியில் இருந்து வெளியேறி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
7 தொகுதிகளில் காலியாக உள்ளன
எனவே, தமிழகத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டி இருக்கிறது.
2 தொகுதிகளில் இடைத்தேர்தல்
இவற்றில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 6ம் தேதி இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
நிலுவையில் தேர்தல் வழக்கு
தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி பாளையங் கோட்டை வெங்கடாஜலபதி, என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
5 தொகுதிக்கு தேர்தல் நடத்த தடை
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து உத்தரவிட்டது. தேர்தல் ஆணையமும், தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட மாட்டாது என பதில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில், ஒரு எதிர் மனுதராராக இருந்த முதல்வர் விஜய் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
பெருந்துறை தேர்தல் - நீதிமன்றத்தில் முறையீடு
இதே போல் தடையை நீக்க கோரி அதிமுகவில் வெற்றி பெற்று பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா உள்ளிட்டோரும் தடையை நீக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரணை
இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெருந்துறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு நிராகரிக்கப்பட்டதாகவும் எனவே தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
5 தொகுதிக்கு தேர்தல் நடத்த தடை
தேர்தல் ஆணையம் சார்பாக வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவு நகல் கிடைக்கப்பெறவில்லை என்றும் வந்தபின் அதனை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். அனைத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேர்தல் அறிவிப்புக்கு விதிக்கபட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.
28ம் தேதி இறுதி விசாரணை
இறுதி விசாரணை வரும் 28ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளனர். அதுவரை 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பே இல்லே. இது, தவெகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
===============