High Court ordered TN govt to publish guidelines for road shows, public gatherings by January 5th 
தமிழ்நாடு

ரோடு ஷோ, பொதுக்கூட்டங்கள் வழிகாட்டு நெறிமுறை : நீதிமன்றம் கெடு

ரோடு ஷோ' மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டி விதிமுறைகளை, ஜனவரி, 5ம் தேதிக்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Kannan

வழிகாட்டு நெறிமுறைகள் - நீதிமன்றம் கெடு

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். எனவே, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஏராளமானோர் கூடுவதை கட்டுப்படுத்தவும், அரசியல் கட்சிகளின், 'ரோடு ஷோ' மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு, நிலையான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க கோரி, துாத்துக்குடியை சேர்ந்த திருகுமரன், தேசிய மக்கள் சக்தி கட்சி, த.வெ.க., உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

வரைவு வழிகாட்டி நெறிமுறைகள்

வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 20 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், 42க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் கருத்துகளை பெற்று, 'ரோடு ஷோ' மற்றும் பொது கூட்டங்களுக்கு, 46 பக்கங்கள் கொண்ட வரைவு வழிகாட்டு விதிமுறைகளை வகுத்து, நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது.

அரசியல் கட்சிகள் ஆலோசனை

அதேசமயம், வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, அதிமுக, தவெக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில், ஆலோசனைகள் தாக்கல் செய்யப்பட்டன. அவை பரிசீலிக்கப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.

ஜன.5க்குள் நிலையான விதிமுறைகள்

இந்தநிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, உத்தரவு பிறப்பித்துள்ளது.

'அரசால் வகுக்கப்பட்ட வழிகாட்டு விதிமுறைகள் தொடர்பாக, பரிந்துரைகள், ஆட்சேபனைகள், கருத்துகள் போன்றவற்றை, மாநில அரசு பரிசீலித்து, இறுதி செய்யப்பட்ட நிலையான வழிகாட்டு விதிமுறைகளை, ஜனவரி, 5ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும்.

'இந்த வழிகாட்டு விதிமுறைகளில் ஆட்சேபனை இருந்தால், அது தொடர்பாக சட்டரீதியான பரிகாரத்தை பெற நீதிமன்றத்தை அணுகலாம்' என்று தங்கள் உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

====